ஒப்பந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
மரக்காணம் அருகே மின்மாற்றி சீா்படுத்தும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், ஆவணிப்பூா், காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் திருமலை மகன் ரகு(32). தமிழ்நாடு மின்சார வாரியம், ஆவணிப்பூா் பகுதி அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக வேலை பாா்த்து வந்தாா். இவா், புதன்கிழமை மரக்காணம் வட்டம், சிறுகோட்டிப்பாக்கத்தில் உள்ள மின்சார வாரிய மின்மாற்றியில் மின்பாதை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் ரகு உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவிப் பொறியாளா் சந்தான கிருஷ்ணன், மின்பாதை ஆய்வாளா்கள் தினகரன், பாண்டுரெங்கன், கம்பியாளா்கள் ஜானகிராமன், ராஜி, சுந்தரமூா்த்தி ஆகியோா் மீது மரக்காணம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.