சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கோரிக்கை
`ஒரு தலைவன்; 5 தலைவிகள்’ ; குட்டியை மறைக்கும், மாம்பிஞ்சுக்கு ஏங்கும்..! - இது மான்களின் வாழ்க்கை
மான்களை வேட்டையாட, புலியோ, சிறுத்தையோ, செந்நாய்களோ, நரிகளோ, கழுதைப்புலிகளோ தூரத்தில் வரும்போதே, மரங்களின் மீது உட்கார்ந்திருக்கிற மயில்கள் அகவல் செய்து மான்களை எச்சரித்து விடுமாம். மயில்கள் ஏன் மான்களைக் காப்பாற்ற வேண்டும்? மான்களுக்கும் மயில்களுக்கும் இடையே இருக்கிற நட்பு எப்படிப்பட்டது?
மான்களுக்கு மிகவும் பிடித்த உணவு புல்லோ, இலை தழையோ அல்ல. மாம்பிஞ்சுகள்தான் மான்களின் விருப்ப உணவு. தங்களை மறந்து மாம்பிஞ்சுகளைச் சாப்பிடுமாம் மான்கள். அதன் காராணமாகவே மாமரங்கள் இருக்கிற இடங்களில் மான்களை சாப்பிட வேட்டையாடிகள் காத்திருக்குமாம் மற்ற விலங்குகள். அந்த நேரங்களில் மான்களைக் காப்பாற்றுவது எந்த விலங்கு தெரியுமா?
புள்ளிமான்களின் உதிர்ந்த கொம்புகள் இன்னொரு விலங்குக்கு உணவு. அது எந்த விலங்கு?
சங்க இலக்கியங்களில் மான்களின் காதல்பற்றி சொல்லப்பட்டிருப்பது எந்தளவுக்கு உண்மை?
வாருங்கள், எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கோவை சதாசிவம் சொல்வதைக் கேட்போம்.

`குழுவின் தலைவனான ஆண் மானே பொறுப்பு’
’’மான்கள் குழுவாக வாழும் காட்டுயிர்கள். ஒரு குழுவில 15-லிருந்து 30 மான்கள் வரைக்கும் இருக்கும். மான்களை பொறுத்தவரைக்கும் ஆண் மான் தான் குழுவை தலைமை தாங்கி வழி நடத்தும். தன் குழுவில் இருக்கும் பெண் மான்களுக்கும் மான்குட்டிகளுக்கும் ஏதாவது ஆபத்து வந்தால் எச்சரிப்பது ஆண் மான்கள்தான். மற்ற காட்டுயிர்களுக்கு எங்கே உணவு கிடைக்கும் என்பதே நோக்கமாக இருக்கும். ஆனால், மான்களை பொறுத்தவரை எந்த பாதுகாப்பான இடத்தில் உணவு கிடைக்கும், எந்த பாதுகாப்பான இடத்தில் தண்ணீர் கிடைக்கும் என்பதுதான் நோக்கமாக இருக்கும்.
மான்கள் பசியாறி நிழலுக்கு ஒதுங்கும் மரங்கள்கூட அவற்றுக்கு பாதுகாப்பான இடமாக இருக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. தன் குழுவில் இருக்கிற பெண் மான்களின் பாதுகாப்புக்கும் மான் குட்டிகளின் பாதுகாப்புக்கும் குழுவின் தலைவனான ஆண் மானே பொறுப்பு. அதனால், எங்கு புல் மேய்வது, எங்கு நீர் அருந்துவது, எங்கு நிழலுக்கு ஒதுங்குவது என்பதையெல்லாம் ஆண் மானே முடிவு செய்யும். ஒரு மான் தலைவனுடன் நான்கைந்து தலைவிகள் இருக்கும்.
புள்ளிமான்களை பொறுத்தவரைக்கும் வருடத்துக்கு ஒருமுறை கொம்பு விழுந்து முளைக்கும். ஒவ்வொரு வருடமும் தலைவன் மான், தான் பலமான ஆண் மான் என்று நிரூபிக்க வேண்டி வரும். ஏனென்றால், ஒரு மான் கூட்டத்தை கைப்பற்றி அதன் தலைவனாக வருடந்தோறும் ஆண் மான்களுக்குள் போராட்டம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். கொம்பு விழுந்து முளைத்த உடனே புள்ளி மான் கூட்டத்தில மான் தலைவிகளையும் மான்குட்டிகளையும் கைப்பற்றும் போராட்டம் ஆண் மான்களின் மத்தியில் தொடங்க ஆரம்பிக்கும். தன்னுடைய குடும்பத்தை கைப்பற்றவரும் வேறொரு ஆண் மானை சண்டையில் ஜெயிக்க சகலவித போராட்டங்களையும் கையெடுக்கும் தலைவன் மான். தலைவனாக இருக்கிற ஆண் மான் வயது மூப்பு காரணமாக தோல்வியடையும்போது, தலைவிகளும் குட்டிமான்களும் கூட்டத்தின் புதிய தலைவனுடன் சேர்ந்துவிடும். இதுதான் புள்ளிமான்களின் வாழ்வியல்.
நம் ஊரில் இருக்கிற மான்களில் பெரியது கடமான். இந்த வகை மான்களுக்கு கொம்பெல்லாம் உதிர்ந்து விழாது. அடுத்தது வெளிமான். இதைத்தான் நாம் திருகுக்கொம்பு மான் என்று குறிப்பிடுவோம். இந்த மான்களுக்கும் கொம்புகள் உதிராது.
காடுகளில் மான்கள் கூட்டமாக ஓர் இடத்தில் இருந்தால், அதற்கு அருகாமையில் மயில்கள் கண்டிப்பாக இருக்கும். இதற்கு என்னக் காரணம் தெரியுமா? மான்களின் குளம்படிகள்பட்டு மண்ணுக்குள் இருக்கிற புழு பூச்சிகள் எல்லாம் வெளியில வரும். அவற்றையெல்லாம் மயில்கள் சாப்பிட்டு விடும். இதற்கு நன்றிக்கடனாகத்தான், மரங்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மயில்கள், வேட்டையாடி விலங்குகள் தூரத்தில் வரும்போதே ஒலி எழுப்பி மான்களை எச்சரித்து விடும். உடனே மான்கள் எச்சரிக்கையாகி விடும். அல்லது அங்கிருந்து ஓடி விடும்.
மான், மயில் இரண்டுமே மனிதர்களின் அருகாமையில் வாழக்கூடிய உயிர்கள். இரண்டுமே முல்லை நில உயிர்கள். ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டில் 90 சதவிகித முல்லை நிலம் இல்லை. அவை காணாமல் போய்விட்டன. அதன் விளைவுதான் மயில்கள் விளைநிலங்களை சேதம் செய்துகொண்டிருக்கின்றன.
மான்கள் தங்கள் வாழ்ந்து வருகிற குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டி வெகு தூரம் எல்லாம் பயணம் செய்வதில்லை. அதனால், வறட்சியான காலங்களில் மான்களின் வாழ்க்கை துயரம் நிரம்பியதுதான். மிச்சம் மீதம் இருக்கிற புல்லும் நீரும்தான் மான்களுடைய உயிரைக் காக்கும்.

மான்களின் காதலை சங்க இலக்கியங்கள் புகழ்ந்துகொண்டிருக்கின்றன. அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கிறது; கொஞ்சம் புனைவும் இருக்கிறது. வறட்சியான காலகட்டங்களில் ஓர் ஆண் மான் தன்னுடைய தலைவிகளையும் மான்குட்டிகளையும் வழி நடத்திக்கொண்டு போகும்போது, நீர் நிலைகளைக் கண்டால் முதலில் மான் குட்டிகளை நீர் அருந்த விடும். குட்டிகள் அருந்தியதும் பெண் மான்களை நீர் அருந்த விடும். கடைசியாகத்தான் ஆண் மான்கள் பருகும். மற்றபடி, சங்க இலக்கியங்களில் இருக்கிற புனைவுகள்போல, ஆண் குடிக்கட்டும் என்று பெண் மானும், பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மானும் நீர் அருந்துவதுபோல நடிக்கவெல்லாம் செய்யாது.
சரி, ஏன் மான் குட்டிகளையும் பெண் மான்களையும் முதலில் நீர் அருந்த ஆண் மான் அனுமதிக்கிறது தெரியுமா? அதற்கு பின்னால் ஆண் மானுக்கான ஒரு சர்வைவல் யுக்தி இருக்கிறது. தங்களையும் தங்கள் குட்டிகளையும் ஒழுங்காக பராமரிக்கிற ஆண் மான்களுடன்தான் பெண் மான்கள் தங்கும். பெண் மான்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்றால், ஆண் மான்களுக்கென்று ஒரு குழுவும் இருக்காது. அதற்கு அது தலைவனாகவும் இருக்க முடியாது.
மான்களுக்கு பழங்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். மாம்பிஞ்சுகள் என்றால் மான்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால், மான்களால் புல்லைத்தானே மேய முடியும்... மான்களுக்கு மாம்பிஞ்சுகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பது மரங்களில் வாழ்கிற சாம்பல் மந்திகளுக்கு தெரியும். மாம்பிஞ்சுகள் தரையில் விழுந்து கிடக்கின்றனவா என்று மான்கள் ஏக்கத்தோடு தேடிக் கொண்டிருந்தால், அந்த மாமரத்தின் மேல் இருக்கிற சாம்பல் மந்திகள் மாம்பிஞ்சுகளைப் பறித்து கீழே போடும். மான்கள் மாம்பிஞ்சுகளை சாப்பிடும்போது, அதன் ருசியில் தங்களை மறந்து இருக்கும். மான்களுக்கு எப்போதுமே உயிராபத்து பின்தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படி மான்களை பின்தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும் வேட்டையாடி விலங்குகள் இதுதான் நேரம் என்று பதுங்கிக்கொண்டிருப்பதை சாம்பல் மந்திகள் பார்த்து விடும். பார்த்த அடுத்த நொடி குய்யோ, முய்யோ என அலறி மான்களை அங்கிருந்து தப்பிப் பிழைக்க வைத்து விடும்.

பெரும்பாலும் பெண் மான்கள் ஒரு கர்ப்பத்தில் ஒரு குட்டிதான் ஈனும். இந்த நேரத்தில் மான் கூட்டம் கர்ப்பிணி மானை சூழ்ந்துக்கொண்டிருக்கும். அந்த பெண் மானை விட்டு அவை எங்கும் நகராது. பிறந்த ஒன்றிரண்டு மணி நேரங்களில் மான் குட்டி எழுந்து நடந்து, தாய் மானின் வாசனையை அறிந்து அதனிடம் பால் குடிக்க ஆரம்பித்து விடும். இதன் பிறகுதான் அந்த மான் கூட்டம் அடுத்த இடத்துக்கு புல்லும் நீரும் தேடி நடக்க ஆரம்பிக்கும். புதிதாக பிறந்த குட்டி அம்மாவின் கால்களின் நடுவில் நடந்து வரும். தலைவன் மானும் மற்ற மான்களும், புதிதாகப் பிறந்த குட்டி மான் ஒன்று தங்கள் கூட்டத்துக்குள் இருப்பது வெளியில் தெரியாமல் இருப்பதற்காக பிரசவித்த மானையும் அதன் குட்டியையும் மறைத்தபடி நடக்கும். பெண் மான்கள் குட்டி ஈனும் வாடையை செந்நாய்கள், நரிகள், கழுதைப்புலிகள் மோப்பம் பிடித்துவிட்டால் அதை வேட்டையாட வந்து விடும். தவிர, வேட்டையாடிகள் தங்கள் குட்டிகளுக்கு மான் குட்டிகளை வைத்துதான் எப்படி வேட்டையாடுவது என்று சொல்லிக் கொடுக்கும். அவற்றின் கண்களில் தங்கள் குடும்பத்தில் பிறந்த புதிதாகப் பிறந்த குட்டி மான் பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளை மான்கள் செய்கின்றன. குட்டிமான்கள் பிறந்த 10 முதல் 15 நாள்களில் துள்ளி குதித்து ஓட ஆரம்பிக்கும். இதன் பிறகு அதனுடைய ஆயுள் அதனுடைய கால்களின் வேகத்தில்தான் இருக்கிறது.
புள்ளிமான்களின் கொம்புகள் வருடத்துக்கு ஒரு முறை உதிர்ந்து விழும் என்று சொன்னேன் அல்லவா..? அந்த கொம்புகளும் வீணாய் போவதில்லை. மான் கொம்புகளையும் வேட்டையாடப்பட்ட காட்டு விலங்குகளின் குளம்புகளையும் முள்ளம்பன்றிகள் சாப்பிட்டு விடும். ஏனென்றால், முள்ளம் பன்றிகளுக்கு உடல் முழுக்க முட்களாக இருப்பதால் அவற்றுக்கு கால்சியம் சத்து அதிகம் தேவை. அதற்காக, அவை உதிர்ந்த மான் கொம்புகளையும் உயிர் விட்ட விலங்குகளின் எலும்புகளையும் குளம்புகளையும உண்டு தங்கள் உடலில் சுண்ணாம்பு சத்தை அதிகரித்துக் கொள்ளும்.

காட்டு உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்பவை. இந்தக் கட்டுரையில் மான்களைப் பற்றி பேசுவதால் இதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மான்களுக்கு நாம் சாப்பிடும் உணவுகளைக் கொடுத்தால் அவற்றுக்கு மரபணு பிறழ்வு நோய் ஏற்படும். பூங்காவில் மான்களைப் பார்க்க செல்பவர்கள், அவர்கள் சாப்பிட்ட இட்லியையும் கெட்டுப்போன பூரிக்கிழங்கையும் கொடுக்கிறார்கள். காட்டுக்குரியதை நாம் எடுத்து வரவும் கூடாது. நம்முடைய உணவை அவற்றுக்குக் கொடுக்கவும் கூடாது.
காட்டில் மயிலுக்கு மான் உதவும்... மானுக்கு மயிலும் மந்தியும் உதவும்... உதிர்ந்த மான் கொம்புகளோ முள்ளம்பன்றிகளுக்கு உணவாகும். ஆஹா... இதுதான் காட்டின் இணக்கமான வாழ்க்கைச்சூழல்’’ என்று சிலாகிக்கிறார் கோவை சதாசிவம்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play