ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 770 கி.மீ. பயணம்.. மெர்ஸிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ!
ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 770 கி.மீ. பயணம் மேற்கொள்ளும் வகையில் மெர்ஸிடிஸின் புதிய செடான் இவி காரை அறிமுகம் செய்யவிருக்கிறது மெர்ஸிடிஸ் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம்.
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள மெர்ஸிடிஸ் நிறுவனம் தங்களது தயாரிப்பிலேயே குறைந்த விலையில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய செடான் காரை ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.
புதிய வகை CLA கார்கள் மின்சாரத்திலும், ஹைபிரிட் மாடலிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய வகை CLA EV கார்கள் இரண்டு மேம்படுத்தப்பட்ட வகைகளில் கிடைக்கிறது.
ஒன்று CLA 250+ மற்றொன்று CLA 350 4 Matic. முதல் வகை CLA 250+ காரில் 272 குதிரைத் திறனை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், 0 முதல் 100 மீட்டர் தூரத்தை 6.7 வினாடிகளில் எட்டிவிட முடியும்.
அதேநேரத்தில், CLA 350 4Matic காரில் முன்னால் இருக்கும் அச்சில் கூடுதலாக 108 குதிரைத்திறன் வெளிப்படுத்தும் வகையில் மொத்தமாக 354 குதிரைத்திறனை வெளிப்படுத்தும்.
இது 4.9 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தை எட்டும் என்று அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இருவகை கார்களிலும் 85 kWh மின்கலன் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
CLA 250+ கார் ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 792 கி.மீட்டரும், CLA 350 4Matic காரில் ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 770 கி.மீட்டரும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மேலும், 10 நிமிஷங்கள் சார்ஜ் ஏற்றினால், 300 கி.மீட்டர் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை: ரூ.31.72 லட்சத்தில் தொடங்கி ரூ.77.69 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: கோடைக் கால விற்பனை: ஸ்மார்ட் போன்களுக்கான சலுகைகள் என்னென்ன?