ஒரே போட்டியில் பல சாதனைகள்... மிரட்டும் ஜோ ரூட்!
இங்கிலாந்து பேட்டர் ஜோ ரூட் ஒரே இன்னிங்ஸில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல்நாள் முடிவில் 251/4 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் நிதீஷ் ரெட்டி 2, பும்ரா, ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 191 பந்துகளில் 99 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஒரே இன்னிங்ஸில் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
ஜோ ரூட் நிகழ்த்திய சாதனைகள்
சொந்த மண்ணில் 7,000 ரன்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 7,000 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் உலக அளவில் 5-ஆவது நபராகவும் இங்கிலாந்தின் முதல் நபராகவும் சாதனை படைத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இருப்பவர்கள்
ரிக்கி பாண்டிங் - 7578 (ஆஸ்திரேலியா)
சச்சின் டெண்டுல்கர் - 7216 (இந்தியா)
மகிலா ஜெயவர்தனே - 7167 (இலங்கை)
ஜாக் காலிஸ் - 7035 (தென்னாப்பிரிக்கா)
டெஸ்ட்டில் அதிக அரைசதங்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான அரைசதங்களை அடித்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் 103 அரை சதங்களுடன் ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங்கை சமன்செய்து 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் சச்சின் 119 அரைதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
23,000+ பந்துகளை எதிர்கொண்டு சாதனை
உலக அளவில் 7-ஆவது வீரராக 23,000-க்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்டு விளையாடி ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் அலைஸ்டர் குக்-கிற்குப் பிறகு இந்த மைல்கல்லை ஜோ ரூட் எட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக 3,000 டெஸ்ட் ரன்கள்
இந்தியாவுக்கு எதிராக 3,000 டெஸ்ட் ரன்கள் அடித்த முதல் வீரராக ஜோ ரூட் சாதனை நிக்ழ்த்தியுள்ளார். ரிக்கி பாண்டிங் 2,555 ரன்கள் எடுத்திருந்தார்.