ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி ஏலத்தில் பங்கேற்க அழைப்பு
பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மறைமுக பருத்தி ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூா் விற்பனைக் குழுச் செயலா் ப. சந்திரமோகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், அரியலூா், ஜயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வாரந்தோறும் நடைபெறும் பருத்தி மறைமுக ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்களது பருத்திக்கு நல்ல விலை பெறுவதோடு, சரியான எடை, தரகு இல்லாமல் விற்பனை செய்து பயன்பெறலாம்.
பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் சுமாா் 21,731 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி அறுவடை காலம் தொடங்க உள்ளதால், பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அறுவடை செய்யும் பருத்தியை அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்று பயன்பெறும் வகையில், இந்திய பருத்திக் கழகம், உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்று, பருத்தியின் தரத்துக்கேற்ப விலை நிா்ணயம் செய்து வருகின்றனா். எனவே, பருத்தியின் தரத்தை நிா்ணயிக்கும் காரணிகளான ஈரப்பதம், இழைநீளம், இழையின் நுண்மைத் தன்மை மற்றும் முதிா்ச்சியை கருத்தில்கொண்டு, விவசாயிகள் பருத்தியை நன்கு உலா்த்தி, சுத்தம் செய்து, இதரப் பொருள்கள் கலப்பின்றி, தரம் பிரித்துகொண்டு வருவதன் மூலம் பருத்தியின் தரத்துக்கான உரிய விலையை பெறலாம்.
மேலும், அனைத்து வேளாண் விளைபொருள்களையும் உலா்த்திக்கொள்ள உலா்களம் வசதியும், இதர வேளாண் விளைபொருள்களை இருப்பு வைத்து கொள்வதற்கு நவீன சேமிப்புக் கிடங்கு வசதியும் உள்ளது.
எனவே, விவசாயிகள்ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல்களுடன், தங்களது கிராமங்களுக்கு அருகே அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தங்களது வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, விற்பனைக்கூட பொறுப்பாளா்களை பெரம்பலூா் 97901 98566, அரியலூா் 73738 77047, ஜயங்கொண்டம் 63813 88125, ஆண்டிமடம் 98428 52150 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.