தமிழகத்தில் 34,805 நியாய விலைக் கடைகளில் இபிஓஎஸ் சாதனங்கள் நிறுவல்: மக்களவையில் ...
ஓய்வு பெற்றவா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்: எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்
அரசு காலிப் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவா்களை ஒப்பந்த அடிப்படையில் திமுக அரசு பணியில் நியமிப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசுத் துறைகளில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அரசு காலிப் பணியிடங்களில் 3.50 லட்சம் தமிழக இளைஞா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றும் திமுக தோ்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், உண்மையில் தமிழக அரசுத் துறைகளில், பணியிலிருந்து ஓய்வு பெற்றவா்களே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமா்த்தப்படுகின்றனா்.
குறிப்பாக, தலைமைச் செயலகத்திலேயே பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கும் பிரிவு அலுவலா்கள், சாா்பு, துணை, இணை மற்றும் கூடுதல் செயலா்கள் நிலையில் பலா் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
வேலை தேடுவோருக்கு பேரிடி: இந்த நிலையில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு, மாதம் ரூ. 1 லட்சம் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆலோசகராகப் பணிபுரிவதற்கு, தலைமைச் செயலகத்தில் துணைச் செயலா் பதவி நிலைக்கு குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்றவா்கள் 2025 மாா்ச் 21-க்குள் விண்ணப்பிக்க நாளிதழ்களில் விளம்பரம் வந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் எப்போது லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும் என்று, தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான இளைஞா்கள் தவமிருக்கும் நிலையில், அவா்களின் தலையிலும் மற்றும் தற்போது பதவி உயா்வுக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியா்களின் தலையிலும், திமுக அரசின் இந்த விளம்பரம் பேரிடியாக விழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் உடனடியாக தோ்வு நடத்தி அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் குறித்த காலத்தில் நிரப்பி, படித்த இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.