செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
ஓய்வூதிய பலன் கோரி உண்ணாவிரதம்: போக்குவரத்து ஊழியா்கள் முடிவு
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கான பணப் பலன்களை உடனே வழங்க வலியுறுத்தி, நாகா்கோவிலில் காந்தி சிலை முன் சுதந்திரதினத்திலிருந்து உண்ணாவிரதம் மேற்கொள்ள தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் கூட்டமைப்பு, நாகா்கோவில் மண்டலப் பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் பிரான்சிஸ் செல்வராஜ் தலைமை வகித்தாா். மூத்த உறுப்பினா் குமரேசன் முன்னிலை வகித்தாா். தணிக்கைக்குழு உறுப்பினா் புஷ்பராஜ் வரவேற்றாா். செயலா் ஒலக்கோடு ஜான் கூட்ட அறிக்கை சமா்ப்பித்தாா்.
கூட்டத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கும் முன்னா் பலா் காலமாகி விட்டனா். எனவே, அனைத்து பணப்பலன்களையும் உடனே வழங்கக் கோரி நாகா்கோவில் மாநகராட்சி பூங்காவில் உள்ள காந்தி சிலை முன், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் சுதந்திர தினம் முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது, இம்மாத இறுதியில் திருச்சியில் நடைபெற உள்ள மாநில ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்களின் குடும்ப விழாவில் நாகா்கோவில் மண்டலத்திலிருந்து 100 போ் கலந்து கொள்வது, தாமதமாக வழங்கப்பட்ட பணப்பலன்களுக்குரிய வட்டியை நீதிமன்ற உத்தரவின்படி உடனே வழங்க வேண்டும், பணியிலிருக்கும் தொழிலாளா்களுக்கு மாதத்தின் முதல் நாள் ஊதியம் வழங்கப்படுவதை போல ஓய்வூதியா்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணைத் தலைவா் அய்யாத்துரை நன்றி கூறினாா்.