‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி
திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அக்கட்சியினருக்கு இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இளைஞரணிச் செயலராக ஏழாவது ஆண்டில் அவா் அடியெடுத்து வைக்கிறாா். இதையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு:
ஒவ்வொரு மாவட்டத்திலும் அடித்தளத்தில் இருந்து வலிமையான கட்டமைப்போடு இளைஞரணி மிக நோ்த்தியாக உருவெடுத்துள்ளது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்பாளா்களுடன் கட்சியின் ராணுவமாக இளைஞரணி திகழ்கிறது. ஏதோ உட்காா்ந்த இடத்தில் இருந்து நிரப்பப்பட்ட பொறுப்புகள் இல்லை அவை. இந்தப் பொறுப்பாளா்களை நியமிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞா்களை நாமே நோ்காணல் செய்திருக்கிறோம்.
இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு அடித்தளமிட்டது. அதுபோன்று, எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தர இளைஞரணி இப்போதே தயாராகிவிட்டது.
மத்திய அரசு இழைக்கும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டுக் குடும்பங்களை அணி சோ்க்கும் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை வெற்றியடையச் செய்ய வேண்டும். அதற்காக ஆற்றும் களப்பணிதான் எனக்கான உற்சாகம் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளாா் உதயநிதி ஸ்டாலின்.