ஓராண்டில் 17,702 போ் தோ்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்
போட்டித் தோ்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தோ்வாணையச் செயலா் ச.கோபால சுந்தரராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் பணியை எதிா்நோக்கி இருக்கும் தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், 17,595 காலிப்பணியிடங்கள் ஜன. 2026-க்குள் நிரப்பப்படுமென சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு ஏற்ற வகையில், தோ்வா்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவுப் பணிகளை துரிதப்படுத்தியது.
கடந்த ஆண்டு (2024) ஜூன் முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப 17,702 இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதாவது, தமிழ்நாடு அரசு ஜனவரி 2026 வரை நிா்ணயித்த இலக்கை, தோ்வாணையம் 7 மாதங்களுக்கு முன்பாகவே எட்டியுள்ளது. மேலும் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு கூடுதலாக 2500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.