பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா்...
கச்சத்தீவு திருவிழா: 3 மணி நேரம் அனல் வெயிலில் தவித்த இந்திய பக்தர்கள்... இலங்கை அரசு மெத்தனம்
இலங்கையில் 2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா மீண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள பழைய ஆலயத்திற்கு பதிலாக இலங்கை அரசு புதிய ஆலயம் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் எழுப்பியுள்ளது. இவை தவிர இங்கு நிரந்தர கடற்படை மையத்தினையும் இலங்கை அரசு நிறுவியுள்ளது. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கச்சத்தீவு திருவிழா தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று புனித அந்தோணியாரை வழிபடுவதுடன், இரு நாடுகளிலும் உள்ள தமிழர்கள் தங்களின் உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து மகிழ்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக அன்று காலை ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 78 விசைப்படகுகள், 18 நாட்டுப்படகுகளில் 2478 ஆண்கள், 587 பெண்கள், 75 சிறுவர்கள் என 3140 இந்திய பக்தர்கள் கச்சத்தீவு சென்றனர். அன்று பகலில் இருந்து மாலை வரை இப்படகுகள் கச்சத்தீவு சென்றடைந்தன. இதே போல் இலங்கை தலைமன்னார், நெடுந்தீவு, ஊர்காவல்துறை, இரணதீவு மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளை சேர்ந்த சுமார் 4500 தமிழர்கள் கச்சத்தீவிற்கு வந்தனர்.
கச்சத்தீவு சென்ற தமிழக ஆயர்
தமிழகத்தில் இருந்து முதன்முறையாக கச்சத்தீவு சென்ற ஆயரான, சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லூர்து ஆனந்த் அந்தோணியார் கொடியினை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிலுவை பாதை நிகழ்வு நடந்தது. பின்னர் நடந்த திருவிழா சிறப்பு திருப்பலியில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம், சிவகங்கை ஆயர் லூர்து ஆனந்த் ஆகியோர் நடத்தினர். பின்னர் நடந்த புனித அந்தோணியார் தேர் பவனி நடந்தது.

உறவுகளை உருவாக்கிய கச்சத்தீவு...
இதன் பின் கச்சத்தீவுக்கு வந்திருந்த இந்திய இலங்கை பக்தர்கள், மீனவர்கள் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பை வெளிப்படுத்தினர்.
இதில் ராமநாதபுரத்தில் புக் ஷாப் நடத்தி வரும் சுசீந்திரனும் ஒருவர். தலைமன்னாரை சேர்ந்த சுமார் 40 பேர் அடங்கிய மீனவர் குடும்பத்தினருடன் தனக்கு ஏற்பட்ட பந்தத்தை பகிர்ந்து கொண்டார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் கச்சத்தீவு சென்றிருந்த போது இந்திய ரூபாய் மீது ஆர்வம் கொண்ட இலங்கை சிறுமி ஒருவர் இவரிடம் இந்திய பணத்தை கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரிடையே சுசீந்திரனுக்கு நட்பு உருவானது.

அது முதல் அந்த சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து அவர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இந்த நெருக்கம், கச்சத்தீவு திருவிழா இல்லாத நிலையில் இவர்களை தலைமன்னாருக்கு விமானத்தில் சென்று பார்க்கும் நிலைக்கு உயர்த்தியது. இந்த ஆண்டு நடந்த கச்சத்தீவு திருவிழாவின் மூலம் இவர்கள் மீண்டும் சந்தித்து தங்கள் மதம் கடந்த அன்பினை பகிர்ந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, நேற்று காலை திருவிழா திருப்பலி நடந்தது. இதில் இலங்கை கடற்தொழில் மற்றும் நீரியல் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், இலங்கை கடற்படை அட்மிரல் காஞ்சன பகதுலா மற்றும் இரு நாட்டு பங்கு தந்தையர்கள், பக்தர்கள், மீனவர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
பக்தர்களை வெயிலில் தவிக்க விட்ட இலங்கை கடற்படை...
நேற்று காலை திருவிழா திருப்பலி நிறைவு பெற்றதை தொடர்ந்து இரு நாட்டு பக்தர்களும் தங்கள் ஊர் திரும்ப கச்சத்தீவு படகு தளத்திற்கு வந்தனர். சுமார் 7 ஆயிரம் பக்தர்களும் ஒரே நேரத்தில் கடற்கரையில் கூடியதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இவர்கள் தங்கள் படகுகளுக்குச் செல்ல இலங்கை கடற்படை தற்காலிக மிதக்கும் பாலம் அமைந்திருந்தது. ஆனால் இந்த பாலம் கடந்த காலங்களை விட மிகவும் சிறியதாக அமைக்கப்பட்டிருந்தது. இதனால் ஒவ்வொரு படகாகத்தான் இங்கு அனுமதித்தனர்.

கடந்த முறை ஒரே நேரத்தில் 3 படகுகள் அனுமதிக்கப்பட்டது. இதனால் யாருடைய படகு முதலில் செல்வது என்ற போட்டியில் 15-க்கும் மேற்பட்ட படகுகள் தற்காலிக பாலத்தை முற்றுகையிட்டன. இதனை ஒழுங்கு படுத்த வேண்டிய இலங்கை கடற்படையினர் அதில் அக்கறையின்றி பெயரளவுக்கும் குறைந்த எண்ணிக்கையிலும் பணி செய்தனர்.
இதனால் படகுகளில் ஏறிச் செல்ல பக்தர்களிடையே தள்ளுமுள்ளு நிலவியது. இதில் பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், படகின் உயரத்திற்கு ஏற்ப பாலம் அமைக்கப்படாததால், படகுகளில் ஏறிச் செல்ல முடியாமல் பலர் தவறி விழுந்த நிலை உருவானது. இதனாலும் படகுகளின் புறப்பாடு தாமதமானது. ஊர் திரும்பு பக்தர்களின் நிற்க நிழற்பந்தல் ஏதும் இலங்கை கடற்படையினர் அமைக்கவில்லை. இதனால் வாட்டி எடுத்த அனல் வெயிலில் கடற்கரை வெளியில் பக்தர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் 3 மணி நேரத்திற்கு மேலாக வாடி வதங்கினர்.

இரண்டாம் நாள் திருவிழா முடிந்து விரைவாக ஊர் திரும்பி விடலாம் என்ற நினைப்பில் காலை உணவு மட்டுமே கொண்டு வந்த பக்தர்கள், பயணம் தாமதமாக மதிய உணவு மற்றும் குடிநீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் கச்சத்தீவிற்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட பலரும், ஏன் இங்கு வந்தோம் என நினைக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டனர். ஒரு வழியாக எல்லா பாதிப்புகளையும் சந்தித்த பக்தர்களின் அனைத்து படகுகளும் ராமேஸ்வரத்திற்கு வந்து சேர இரவு 7 மணி வரை ஆனது.
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவில் இரு நாட்டைச் சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் நிலையில், அவர்கள் சிரமமின்றி ஊர் திரும்ப போதுமான ஏற்பாடுகளையும், படகுகளுக்கு செல்ல காத்திருக்கும் பக்தர்களுக்கு போதுமான நிழற்பந்தல்களும் வரும் காலங்களிலாவது இலங்கை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks