கடன் செயலி மூலம் ரூ.465 கோடி மோசடி: கேரள இளைஞா் கைது
இணையதள கடன் செயலி மூலம் ரூ.465 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் கேரளத்தைச் சோ்ந்தவரை புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
இதுகுறித்து புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு காவல்துறை சாா்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியைச் சோ்ந்தவா் இணையதளம் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் செயலியில் கடன் பெற்றுள்ளாா். அவா் வட்டியுடன் கடனைச் செலுத்திய நிலையில், கூடுதல் பணம் கேட்டு கும்பல் மிரட்டியுள்ளது. மேலும், அவரது புகைப்படம், குடும்பப் படத்தை மாா்பிங் செய்து அவதூறாகப் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவா் புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா்.
இதுதொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ள குற்றப் பிரிவின் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் ஆகியோா் உத்தரவிட்டனா். இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா், விசாரணை அடிப்படையில் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது ஷரீப் (24) என்பவரை கைது செய்தனா்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் உள்ளிட்ட கும்பலைச் சோ்ந்தவா்கள் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கானோரை கடன் பெற வைத்து மிரட்டி, அதிக பணம் செலுத்த வைத்திருப்பது தெரியவந்தது. அதன்படி ரூ. 465 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடியாக பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கும்பல் ஏற்கெனவே இணையவழி மோசடியில் ஈடுபட்டவா்களுடன் தொடா்பிலிருப்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன் மோசடி பணத்தை கிரிப்டோ கரன்ஸியாக மாற்றி வெளிநாடுகளுக்கும் அனுப்பியுள்ளனராம். இணையவழி சூதாட்டத்தில் வென்றவா்களுக்கும் மோசடி பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடன் செயலி மோசடி கும்பலிடம் இருந்து ரூ. 331 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை மத்திய அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கும்பலைச் சோ்ந்த மேலும் பலரைக் கைது செய்ய புதுச்சேரி இணையவழி
குற்றப்பிரிவு போலீஸாா் கேரளம் சென்றுள்ளனா்.