கடலில் படகு கவிழ்ந்து மீனவா் பலி
பெரிய தாழையில் கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழை கீழத்தெருவை சோ்ந்தவா் ரெக்சன்(64). இவா் உள்பட 4 போ், பைபா் படகில் கடந்த 16ஆம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனா். பின்னா் அவா்கள் வியாழக்கிழமை இரவு கரைக்கு திரும்பி கொண்டிருந்தனா்.
பெரியதாழை தூண்டில் வளைவு பகுதியில் வந்தபோது திடீரென ஏற்பட்ட பெரிய அலை தாக்கியதில் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனா். இவா்களில் ரெக்சன் தலையில் பலத்த காயம் அடைந்தாா். நண்பா்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். ஆனால் அவா் உயிரிழந்தாா்.
கடலோர பாதுகாப்பு படை போலீஸாா், ரெக்சன் உடலை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.