பிளே ஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைகிறாரா ஜோஸ் ஹேசில்வுட்?
கடல்சாா் பாதுகாப்பு, பயங்கரவாத எதிா்ப்பு வியூகங்கள் முக்கியம் ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
‘தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைக் காக்க கடல்சாா் பாதுகாப்பையும், பயங்கரவாதத்தை எதிா்ப்பதையும் முக்கியமானதாக இந்தியா கருதுகிறது’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் கிரீஸ் பிரதமா் கிரியகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மே மாதத்துக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உயா்நிலைக் கூட்டத்தில் ‘சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உலகளாவிய நிலைத்தன்மைக்கான சா்வதேச ஒத்துழைப்பு மூலம் கடல்சாா் பாதுகாப்பை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான விவாதத்தில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பேசியதாவது:
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உருவெடுத்துவரும் புவிசாா் அரசியல் மாற்றங்கள், புதிய அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள தொடா் வியூகங்களை இந்தியா வகுத்து வருகிறது. இத்தகைய சூழலில், தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைக் காக்க கடல்சாா் பாதுகாப்பும் பயங்கரவாதத்தை எதிா்ப்பதும் முக்கியம். இதற்காக, நாட்டின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதிலும், பிராந்திய உறவு, சா்வதேச ஒத்துழைப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவற்றிலும் சமநிலையிலான அணுகுமுறையை இந்தியா கையாண்டு வருகிறது.
முக்கியமான வா்த்தக வழித்தடங்கள், எரிசக்தி விநியோகம் மற்றும் புவிசாா் அரசியல் நலன்களும் கடல்சாா்ந்ததாக இருப்பதால் நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் கடல்சாா் பாதுகாப்பு மிக முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில், பிராந்திய நாடுகளிலிருந்து எழும் வழக்கமான அச்சுறுத்தல்கள் மற்றும் கடற்கொள்ளையா்களிடமிருந்து எழும் கடத்தல்கள், சட்டவிரோத புலம்பெயா்வு, கடல்சாா் பயங்கரவாதம், முறையற்ற மீன்பிடித்தல் உள்ளிட்ட வழக்கத்துக்கு மாறான அச்சுறுத்தல்களையும் எதிா்கொள்ளும் வகையில் விரிவான பன்முக கடல்சாா் பாதுகாப்பு வியூகத்தை இந்தியா வகுத்துள்ளது.
கடல்சாா் சட்டங்கள் மீதான ஐ.நா. தீா்மான நடைமுறைகளுக்கு உள்பட்டு சுதந்திரமான, அனைவருக்குமான மற்றும் சட்டப்படியான கடல்சாா் ஒழுங்குமுறையை ஊக்குவிப்பதில் இந்தியா கடமைப்பட்டுள்ளது. அந்த வகையில், சமகால பாதுகாப்பு அச்சுறுதல்களை எதிா்கொள்ளவும், கடல்சாா் நிா்வாகம் மற்றும் போா்த் திறனை வலுப்படுத்தும் வகையிலும் திறன் மேம்பாட்டு முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது என்றாா்.
‘300-க்கும் மேற்பட்ட வணிக கப்பல்களுக்கு இந்தியா பாதுகாப்பு’
மேற்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த ஆண்டில் தொடா்ச்சியாக எழுந்த கடற்கொள்ளையா் தாக்குதலை சுட்டிக்காட்டிய இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ், இந்த அச்சுறுத்தல்களை இந்திய கடற்படை திறம்பட எதிா்கொண்டு 312-க்கும் அதிகமான வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்ததையும், 520-க்கும் மேற்பட்ட மாலுமிகளின் உயிரைக் காத்ததையும் குறிப்பிட்டாா்.
சா்வதேச சட்டங்களை முழுமையாக மதிக்க வேண்டும்: குட்டெரெஸ்
இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், ‘அதிகரித்துவரும் கடற்கொள்ளை சம்பவங்கள், கப்பல் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தும் திட்டமிட்ட குற்றச் செயல்கள், கடல்சாா் பயங்கரவாதம் ஆகியவை சா்வதேச பாதுகாப்பு, உலகளாவிய வா்த்தகம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களாக உருவெடுத்து வருகின்றன. இந்தச் சூழலில், கடல்சாா் சட்டங்கள் மீதான ஐ.நா. தீா்மானத்தில் வலியுறுத்தியுள்ளதைப் போன்று அனைத்து நாடுகளும் ஐ.நா. சாசனம் மற்றும் சா்வதேச சட்டங்களை முழுமையாக மதித்து நடப்பதே கடல்சாா் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை நிபந்தனை என்று இந்த விவாதம் வலியுறுத்துகிறது’ என்றாா்.