Narivetta Review: உணர்வுபூர்வமான வேடத்தில் டொவினோ தாமஸ்; காவல் அதிகாரியாக சேரன்; இந்த வேட்டை எப்படி?
ஆலப்புழாவில் தன் அம்மாவுடன் வசித்து வரும் டொவினோ தாமஸ், படிப்பிற்கு ஏற்ற பெரிய அரசு வேலையில் சேர முயன்று வருகிறார்.
ஒரு பக்கம் குடும்ப வறுமையும், மறுபக்கம் காதலிக்குத் திருமண ஏற்பாடும் அவரை நெருக்க, வேண்டா வெறுப்பாக கான்ஸ்டபிள் வேலையில் சேர்கிறார்.
இந்நிலையில், வயநாடு மலைப் பகுதியிலிருந்து அரசால் வெளியேற்றப்பட்ட பழங்குடி மக்கள், மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்குக் குடியேறும் முயற்சியில், வனப்பகுதிக்குள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவாக, அதைத் தணிக்கும் பொருட்டு, தலைமை காவல் அதிகாரி சேரன் தலைமையில், டொவினோ தாமஸ், சூரஜ் வெஞ்சரமூடு போன்ற காவலர்கள் அடங்கிய காவல்படை அங்கு குவிக்கப்படுகிறது.
பழங்குடி மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே சில மோதல்கள் வெடிக்க, அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களே அனுராஜ் மனோகர் இயக்கியிருக்கும் 'நரிவேட்டை' என்ற இந்த மலையாளப் படத்தின் கதை.
தொடக்கத்தில், பொறுப்பற்ற ஜாலி பையனாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் ஆற்றாமை, கோபம், ஆக்ரோஷம், எழுச்சி என அழுத்தமாகும் கதாபாத்திரத்திற்கு குறைவில்லாத நடிப்பை வழங்கியுள்ளார் டொவினோ தாமஸ்.
கண்டிப்பான அதிகாரியாகவும், தேவையான இடங்களில் வஞ்சகத்துடன் உலாவும் மனிதராகவும் தோற்றத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார் சேரன்.
ஆனால், அக்கதாபாத்திரத்தின் உயர்வு தாழ்வுகளுக்குத் தேவையான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துவதில் பாதி கிணற்றையே தாண்டியுள்ளார்.
அப்புராணி தலைமை காவலராக சூரஜ் வெஞ்சரமூடு, உண்மைக் கதாபாத்திரமான பழங்குடி உரிமைகள் போராளி சி.கே.ஜானுவாக ஆர்யா சலீம் ஆகியோர் கதையின் ஆன்மாவிற்கும், ஆக்ரோஷத்திற்கும் கைகொடுத்துள்ளனர்.

வயலும், காயலும் அழகுறக் கலந்த குட்டநாட்டின் நிலவியலையும், வன்முறைக் காட்சிகளில் இருக்க வேண்டிய பதைபதைப்பையும் நேர்த்தியாகக் கடத்தி, படத்திற்குப் பெரும் பலமாக இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்.
சண்டைக் காட்சிகளில் கச்சிதத்தைக் காட்டியுள்ள படத்தொகுப்பாளர் ஷமீர் முகமது, நீளமான முதற்பாதியில் சாட்டையைச் சுழற்றத் தவறியுள்ளார்.
ஜேக்ஸ் பிஜாய் இசையில், 'மின்னல்' பாடல் மட்டும் காதலின் குளிர்ச்சியைத் தந்துள்ளது. அவரின் பின்னணி இசை, விறுவிறுப்பும், எமோஷனும் கலந்த இறுதிப்பகுதிக்கு உயிரூட்டியுள்ளது.
வனவிலங்கு சரணாலயம், தேசியப் பூங்கா போன்ற பெயர்களில், மலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடி மக்கள், மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அவற்றுக்கு எதிராக அரசு களமிறங்கியது. அவ்வகையில், 2003-ம் ஆண்டு வயநாடு மாவட்டம் முத்தங்காவில் நடந்த பழங்குடி மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தையும், அதன் கோரத்தையும் தழுவி, எழுத்தாளர் அபின் ஜோசப் கதை, திரைக்கதை எழுத, அதை இயக்கியுள்ளார் அனுராஜ் மனோகர்.

டொவினோ தாமஸின் குடும்பம், காதல், சேட்டைகள், லட்சியம், காதல் பிரச்னை, காதல் பாடல் என முதற்பாதி முழுவதும் கதைக்குள் நுழையாமல் கரையில் நின்று அடம்பிடிக்கிறது திரைக்கதை.
டொவினோவின் வெகுளித்தனம், ஆலப்புழாவின் படகுகள், சாலைகள், பயல்கள் போன்றவை தொடக்கத்தில் மட்டுமே சுவாரஸ்யத்தைத் தக்கவைக்க உதவியுள்ளன.
துடுப்பில்லாத வல்லமாகத் தள்ளாடும் கதை, வயநாட்டில் நுழைந்தவுடன் சிறிது சூடு பிடிக்கிறது. ஆனால், சிறிது நேரத்திலேயே மீண்டும் நின்று, அமர்ந்து, சாயத் தொடங்குகிறது.
பழங்குடிகளின் வாழ்க்கை, நில உரிமைப் போராட்டம், அரசுகளின் அராஜகம், போராட்டக்களத்தில் காவல்துறையின் அணுகுமுறை, அரசு - காவல்துறையின் உறவு எனப் பல விஷயங்களைப் பேச முயன்றுள்ளது இரண்டாம் பாதி.
அவற்றை ஓரளவு சுவாரஸ்யமாகவும் பேசியுள்ளது. அதே நேரம், அப்பழங்குடிகளின் போராட்டக் கதை இன்னும் விரிவாகவும், கூடுதல் தகவல்களுடனும் பேசப்படாமல் இருப்பதால், போதுமான எமோஷன் ஆழம் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்.

இரண்டாம் பாதியின் இரண்டாம் பகுதியில் வேகமெடுக்கும் திரைக்கதை, பரபரப்பு, எமோஷன், அரசியல் எனப் பல தளங்களில், சின்னச் சின்ன கிளைக் கதைகளுடன் விரிகிறது.
பழங்குடிகளின் நாட்டார் கதை, அதையொட்டிய பாடல், பழங்குடிகள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறை, பழங்குடிகளுடன் இரையாக்கப்படும் அடிமட்ட காவலர்கள், ஆளும் அரசுகளின் அரசியல் சுழல்களின் ஆட்டம் என சுவாரஸ்யத்துடனும், சில திருப்பங்களுடனும் நகர்கிறது திரைக்கதை.
அரசு பயங்கரவாதத்தைக் காட்சிப்படுத்திய விதம், படத்திற்கு உணர்ச்சிகரமான விதத்தில் பலம் சேர்க்கிறது.
ஆனாலும், இறுதிக் காட்சியில் இன்னும் கூடுதல் நிதானத்தையும், தெளிவையும் திரைக்கதை கொடுக்கத் தவறுவதால், பரபரப்பாக 'முடிந்து கொள்கிறது' படம்.

ஒட்டுமொத்த கேரள அரசியலிலும் அதிர்வை ஏற்படுத்திய அரசு வன்முறையை, அரசியலாகத் தெளிவாக அணுகியிருந்தாலும், தத்தளிக்கும் முதற்பாதி திரைக்கதையும், போதுமான தெளிவும், எமோஷனும் இல்லாத இரண்டாம் பாதி திரைக்கதையும், இந்த 'நரிவேட்டை'யில் பாதி இரையை மட்டுமே வேட்டையாடியுள்ளது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...