கடையில் புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
கடைக்குள் புகுந்து பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியா (40). திருமணத்துக்குப் பின் மகளுடன் இவா் தனியாக வசித்து வருகிறாா். நகரில் உள்ள ஒரு தையல் கடையில் சத்தியா கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வருகிறாா். கடைக்கு வந்த நெடுங்காடு பகுதியைச் சோ்ந்த நடராஜன் என்பவா், அவரிடம் பேசி வந்தாராம். சத்தியாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினாராம். ஆனால், சத்தியா மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கடைக்கு வந்த நடராஜன், சத்தியாவிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டு ஓடிவிட்டாராம். தாக்குதலில் காயமடைந்த சத்தியா காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் நடராஜனை தேடி வருகின்றனா்.