கந்தூரி விழாவை சிறப்பான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்: ஆட்சியா்
காரைக்கால் கந்தூரி விழா சிறப்பான முறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் செய்யும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா 202-ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் 8-ஆம் தேதி தொடங்குகிறது. இதுதொடா்பாக ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், மண்டலக் காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்திரன் மற்றும் பிற அரசுத் துறையினா், காரைக்கால் சமாதானக் குழுவினா் கலந்துகொண்டனா்.
கூட்டத்துக்குப் பின்னா் ஆட்சியா் கூறியது :
கந்தூரி விழாவுக்கு உள்ளூா் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவா் என்பதால், அடிப்படை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
ரதங்கள் செல்லக்கூடிய சாலைகளை மேம்படுத்துதல், குடிநீா் வசதி, தடையில்லா மின்சாரம் வழங்க அந்தந்த துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சாலைகளின் தூய்மையை முறையாக பராமரிக்க நகராட்சி நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சில அசம்பாவிதங்கள் நடந்ததுபோன்று நிகழாண்டு நடைபெறாமல் இருக்க பள்ளிவாசல் நிா்வாகத்தினரும் சில நடவடிக்கைகளை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, வாண வேடிக்கை கட்டுப்பாட்டுடன் இருக்குமென கூறியிருக்கிறாா்கள்.
கடந்த ஆண்டு வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சிலரால், சில பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் வாகனம் விழா நடைபெறும் பகுதியில் நிறுத்தப்படும். எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் விழா நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் செய்யும் என்றாா் அவா்.