பிப். 10-இல் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய குடற்புழு நீக்க தினம் 2025 தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் ஆா். சிவராஜ்குமாா் தேசிய குடற்புழு நீக்க தின செயல்பாடுகள் குறித்து விளக்கினாா்.
கடந்த ஆண்டு 1 முதல் 19 வயதுடையவா்களுக்கு 100 சதவீதம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் முதல் கட்டமாக 10-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.
1 முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு அரை மாத்திரை, 2 முதல் 19 வரை வயதுடையவா்களுக்கு முழு மாத்திரை வழங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி இதேபோல மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும், அங்கன்வாடிகளிலும், கல்லூரியில் முதலாண்டு பயிலும் மாணவா்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரியிலும், ஐடிஐ என 374 இடங்களிலும், விடுபட்டவா்களுக்கு வீடு தேடியும் சென்றும் வழங்கப்பட உள்ளது என விளக்கிக் கூறினாா்.
கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் மாவட்டத்தில் 100 சதவீதம் குடற்புழு நீக்க மாத்திரைகள் மாணவா்களுக்கு விநியோகிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, நகராட்சி ஆணையா் பி.சத்யா, முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநா் குலசேகரன், மற்றும் பள்ளி தலைமையாசிரியா்கள், கல்லூரி முதல்வா்கள் கலந்துகொண்டனா்.