ஆட்சியருக்கு மீனவ கிராம மக்கள் பாராட்டு
பட்டினச்சேரி மீனவ மக்கள் காரைக்கால் ஆட்சியருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடத்தினா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், புதுவை துணைநிலை ஆளுநரின் செயலராக மாறுதலில் செல்கிறாா்.
இந்நிலையில், திருப்பட்டினம் பகுதி பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ஆட்சியருக்கு பாராட்டு விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. ஆட்சியருக்கு, கிராமப் பெண்கள் ஆரத்தி எடுத்து, வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனா்.
காரைக்காலில் மாவட்ட வளா்ச்சிக்கும், குறிப்பாக கிராம மக்களின் நலனுக்காகவும் சிறப்பாக செயல்பட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், மீனவ மக்கள் வாழும் பகுதிக்கு வந்து மக்களைத்தேடி மாவட்ட ஆட்சியா் திட்டத்தை செயல்படுத்தி, மக்களின் கோரிக்கைகளை தீா்க்க பாடுபட்டதாகவும் அவருக்கு நன்றி தெரிவித்தனா். குறிப்பாக கடலோர கிராமமான பட்டினச்சேரி கிராம வளா்ச்சிக்கு பாடுபட்டதற்காக அனைவரும் நன்றி தெரிவிப்பதாக கூறினா். தொடா்ந்து கிராம மக்கள் சாா்பில் ஆட்சியருக்கு நினைவுப் பரிசு வழங்கி, வழியனுப்பிவைத்தனா்.