செய்திகள் :

`கட்டாயக் கடன் வசூல் மசோதா' - யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? - பின்னணி என்ன? | Explained

post image

குடும்பஸ்தன் படத்தில் வேலை இல்லாமல் பணத்துக்கு சிரமப்படும் மணிகண்டன், வேறு வழி இல்லாமல் ஒரு கடன் ஆப்-ல் லோன் எடுப்பார். அந்தப் பணம் கட்டுவதற்கான தவணை முடிந்துவிடும். அப்போதும் அந்த நிறுவனம் 'இப்போ என்ன பண்றேன் பாரு' என வீட்டில் இருக்கும் அனைவரையும் செல்போனில் அழைத்து திட்டுவதற்கு தொடர்புகொள்ளும். ஆனால் ஹீரோ அந்தச் சூழலை சாமர்த்தியமாக சமாளிப்பார்.

இது சாதாரண காமெடிக் காட்சிதான் எனக் கடந்துவிடலாம். ஆனால் இதை அந்த மணிகண்டன் இடத்திலிருந்து பார்க்கும்போதுதான் அந்த பரிதவிப்பும், குற்ற உணர்வும், பதற்றமும் புரியும்.

பைனான்ஸ்
பைனான்ஸ்

துப்பறிவாளன், இறுகப்பற்று போன்ற படங்களில் கூட கடன் வசூல், இ.எம்.ஐ வசூல் என நிறுவனங்களின் ஏஜெண்டுகள் அவமானப்படுத்தும் காட்சிகள் நமக்கே நெருடலாக இருக்கும். விவசாயி தொடங்கி திரைப்படத் தயாரிப்பாளர் வரை கடன் வாங்கியவர்கள் பலரும் அந்தந்த நிறுவனங்களின் தொல்லைகளால் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் திருநெல்வேலியின் ஆட்சியர் அலுவலக வாசல் முதல் சென்னையின் அண்ணா நகர் வரை கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட குடும்பங்களில் எண்ணிக்கை அதிகம். இந்தக் கொடூரங்களுக்குப் பின்னணியில் இருக்கும் 'கடன் வசூல்' என்ற ராட்சசனின் முகம் மிகவும் விகாரமானது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

வியாபாரம்
வியாபாரம்

கட்டாய வசூல் ராட்சசனின் மிக முக்கியப் பிறப்பிடம் சில மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் (Micro Finance Institution - MFI). அதாவது, சிறியளவிலான கடன்களை (micro loans) தனி நபர்களுக்கு, குறிப்பாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்கும் நிதி நிறுவனம். இது வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திராத அல்லது வங்கிக் கடன்களை எளிதாக பெற முடியாத மக்களுக்கு நிதி வழங்குகிறது.

குறிப்பாக கிராமப்புற பெண்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள், கைதொழில் புரிபவர்கள்தான் இந்த நிறுவனங்களின் இலக்கு. அவசரத் தேவைக்காக அதிக வட்டிக்கு இந்த நிறுவனங்கள் பணம் கொடுத்து, அதை வசூலிக்கின்றன. அதேப் போலதான் APP வழியாக கடன் கொடுப்பதும் நிகழ்கிறது.

பணம்
பணம்

இதுபோன்ற மைரோ பைனான்ஸ் நிறுவனங்களில் பணம் பெற்றவர்கள் உரிய நேரத்தில் பணம் செலுத்தவில்லை என்றால், கடன் பெற்றவரின் இல்லத்துக்குச் சென்று சண்டையிடுவது, அவமானப்படுத்துவது, மிரட்டுவது எனத் தொடங்கி, சம்பந்தப்பட்டவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை எண்ணம் உருவாகும் அளவு செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாகவே பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

வாடிக்கையாளர்களிடமிருந்து கடனை வசூலிப்பதற்கென ஒரு குழுவை பைனான்ஸ் நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. அந்தக் குழு அநாகரீக முறையில் நடந்துகொள்வது, நடுவீட்டில் அமர்ந்துகொண்டு செல்ல மறுப்பது எனப் பல்வேறு செய்கைகளில் ஈடுபட்டு, எப்படியாவது பணத்தை வசூலிப்பது என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பார்கள்.

மிரட்டல்
மிரட்டல்

ஹரியானாவில் வாங்கிய ட்ராக்டருக்கு உரிய நேரத்தில் பணம் கட்டாத விவசாயியின் கர்பிணி மகள், ட்ராக்டர் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். அதற்குக் காரணமான அந்த நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. அதேப் போல, ரௌடிகளை வைத்து மிரட்டுவதில் தொடங்கி, புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிப்பதுவரை பல்வேறு குற்றச்சாட்டுகளை மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் சந்தித்திருக்கின்றன. இது தொடர்பாக காவல் நிலையங்களிலும் பல்வேறு புகார்கள் பதிவாகியிருக்கிறது.

"சில காவல்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது என்பதால், இதுபோன்ற விவகாரங்களில் காவல்துறை தலையிடமுடியாத சூழல் நிலவுகிறது. இதை நிதி நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. இதன் உச்சமான தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு செல்பவர்களும் இருக்கிறார்கள்" என்கிறார் ஓய்வுப்பெற்ற காவல்துறை அதிகாரி கருணாநிதி.

வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கொடுத்தக் கடனை எப்படி வசூலிக்க வேண்டும் என ​இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. அதில் மிக முக்கியமான சிலவற்றை இங்கே தருகிறோம்.

  • கடன் வசூலிக்கும் நடைமுறை நியாயமாகவும் நேர்மையானக்வும் இருக்க வேண்டும், வற்புறுத்தும், புண்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். தவறான மொழி, மிரட்டல் தொணி போன்றவற்றை கடுமையாக கண்டித்திருக்கிறது.

  • கடன் வசூலிக்கும் முகவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும், கடன் வசூலிக்கும் நெறிமுறை நடைமுறைகளைக் கடைப்பிடிப்பவர்களாகவும் இருக்க வேண்டும், அவர்கள் கடன் வாங்குபவர்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

RBI - ரிசர்வ் வங்கி
RBI - ரிசர்வ் வங்கி
  • வாடிக்கையாளரின் தனியுரைமை உள்ளிட்ட ரகசியத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும்.

  • நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை, வட்டி விகிதம், கூடுதல் செலவுகள் உட்பட கடனின் அனைத்துத் தகவல்களையும் அறிய கடன் வாங்குபவர்களுக்கு உரிமை உண்டு.

  • நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பவர் குறித்து நிதி நிறுவனத்தில் புகாரளித்தால் உடனடியாக தீர்க்க வேண்டும்.

  • கடன் வசூலிப்பவர் தன்னையும், அவர் எந்த நிறுவனத்துக்காக வசூலிக்க வந்திருக்கிறார் என்பதை ஆதாரத்துடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.

  • கடன் வாங்குபவருக்கும் கொடுப்பவருக்குமிடையிலான அனைத்து தகவல்தொடர்புகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

  • கடன் பெற்றவரை சந்திக்கச் செல்ல காலை 8:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை மட்டுமே தொடர்புகொள்ள முயற்சிக்க வேண்டும்.

கடன்
கடன்

கடன் வசூல் செயல்முறை நியாயமானதாகவும், மரியாதைக்குரியதாகவும், சட்டப்பூர்வமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கும், கடன் வாங்குபவர்களைப் பாதுகாப்பதற்கும், கடன் வழங்குபவர்களுக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் இடையே சமநிலையான உறவை உறுதி செய்வதற்கும் இந்த வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப்பட்டன.

ஆனால் இதில் எந்த வழிமுறைகளையும் பெரும்பாலான நிறுவனங்கள் பின்பற்றுவதே இல்லை என்றக் குற்றச்சாட்டுகளாலும், அதனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களாலும் பல்வேறு சிக்கல்களை அரசு சந்தித்தது.

இதைச் சரிசெய்யும் நோக்கில் 'கட்டாயப்படுத்தி கடன் வசூலித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும்' என்ற மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்தப் புதிய சட்ட மசோதாவின்படி, கடன் வாங்கியவா் மற்றும் அவரது குடும்பத்தினரை, கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக் கூடாது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கடன் வாங்கியவா்களின் குடும்பத்தினரை மிரட்டுதல், பின்தொடருதல் போன்ற குற்றங்களைச் செய்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சோ்த்தோ விதிக்கப்படும்.

கடனை வசூலிக்க வெளியாள்களைப் பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து சில பொதுமக்களிடம் பேசினோம். ``இதோ வீட்ல இருக்குற என் மக.... இவ வயசுக்கு வந்தப்ப கொஞ்சம் காசு தேவபட்டுச்சு தம்பி. ஒரே மகதானே... நாளஞ்சா பெத்து வச்சிருக்கோம்? இதுக்கு இல்லனாலும் இன்னொன்னுக்கு அலங்கரிச்சுப் பாக்கலாம்னு இருக்க. அதுக்காக கொஞ்சம் காசு வாங்குனேன் தம்பி. காசு குடுக்கும்போதே மொதமாச வட்டி, இந்த கடனை கொடுக்குறதுக்கு எதோ பேப்பர் தயார் பண்ணனும்னு (processing fee) காசெல்லாம் புடிச்சிகிட்டுதான் மீதி கொடுத்தாங்க...

அப்படியும் மாசா மாசாம் சரியாதான் கடன் கட்டிட்டு வந்தேன். திடீர்னு உடம்புக்கு சுகமில்லாம போச்சி. வேலைக்கு சரியா போகல.

பெண்
பெண்

சோத்துக்கே கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. அதனால ஏதோ ஒருமாசம் கட்ட முடியல. அதுக்காக என் வூட்டு வாசல்ல வந்து நின்னு அசிங்கமா பேசுவியா? என்ன விடுங்க தம்பி, வீட்ல வயசுக்கு வந்த பொம்பளப்புள்ள இருக்கு. நாளபின்ன தெருவுல நடமாட வேணாமா? அடுத்த மாசம் சேர்த்து கட்டுறேனு சொல்லியும் வந்து அசிங்கப்படுத்துனா, வாய்க்கு வந்தபடி திட்டுனா என்ன பண்றது சொல்லுங்க. இந்த சட்டம் ஏதோ எங்கள மாதிரி கஷ்டப்படுற ஆளுங்களுக்கு உதவினா சரிதான்" என்கிறார் விருகம்பாக்கத்தில் வசிக்கும் சகுந்தலா.

பேசிய பெரும்பாலானவர்களின் குரலில் இருந்த குமுறலிலும், ஆதங்கத்திலும், அவமானத்தை எதிர்கொண்டதின் எச்சம் மிச்சமிருந்தது.

இந்த சட்டம் மக்களுக்கு எப்படி உதவும் என அமலுக்கு வந்தப்பிறகுதான் உறுதியாகக் கூற முடியும் எனப் போட்டுடைத்தார் சட்ட நிபுணரும், வழக்கறிஞருமான ஆர். பூபதி. ``இதற்கு முன்பே ஆர்.பி.ஐ-யும், உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் பல்வேறு நடவடிக்கைகளில் கடன்பெற்ற வாடிக்கையாளரை எப்படி அணுக வேண்டும் என வழிகாண்பித்திருக்கிறது.

ஆர். பூபதி
ஆர். பூபதி

ஆனால், அது எதையும் இந்த நுண் நிறுவனங்கள் பின்பற்றுவதே இல்லை. இப்போது இந்த மசோதாவில் இருக்கும், கடன் பெற்றவரை பின்தொடர்வது, அவமானப்படுத்துவது என எல்லாமே இதற்கு முன்பே கூறப்பட்டதுதான். அதையே அரசால் முறையாக செயல்படுத்த முடியவில்லை. இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்வது சாமானிய மக்களும், அவர்களால் வழி நடத்தப்படும் உதவிக்குழுக்களும்தான். பெரும் நிறுவனங்கள் இதுபோன்ற அவமானங்களை சந்திப்பதில்லை.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை மதிப்பதில்லை

ஒருவேளை பெரும் நிறுவனங்கள் கடன் செலுத்தமுடியாத சூழல் ஏற்பட்டால், தனக்கென வைத்திருக்கும் சட்டக் குழு மூலம் இந்தப் பிரச்னையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று 'எங்களிடம் காசு இல்லை' எனக் கூறிவிடுவார்கள்.

ஆனால், தனக்கு நடந்த அவமானத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லாம், நமக்காக வாதாட ஊதியம் பெறாத வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என்ற விழிப்புணர்வே சமானிய மக்களுக்கு இன்றுவரை இல்லை. இப்போது நிறைவேற்றப்பட்ட மசோதாவும் மக்களிடம் சென்று சேர்வதற்குப் பல வருடங்கள் ஆகும்.

இந்த சட்டங்களை, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை அடாவடி வசூல் நிறுவனங்கள் மதிப்பதில்லை என்பதுதான் எதார்த்தம். முதலில் ஒரு கடன் ஆப் தரவிறக்கம் செய்கிறோம் என்றால் உங்களின் காண்டாக்ட், கேமரா, செல்ஃபி அக்ஸஸ் கேட்கும். இதுவே இந்தியாவின் TRAI சட்டத்துக்கு எதிரானது. டேட்டா திருட்டுதான். இதுமட்டுமல்லாமல், பெறப்பட்ட புகைப்படங்கள் மூலம் மார்ஃப் செய்து மிரட்டுவது என அவர்களின் சட்டவிரோத செயல்பாடுகள் அதிகமாகவே இருந்திருக்கிறது.

வட்டி

0% இன்ஸ்ட்ரஸ்ட்

சரியாக கடன் கட்டிவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை எனக் கூறுபவர்களும் உண்டு. ஆனால், இதற்கு பின்னணியில் நிதி மோசடிகளும் நடக்கிறது. முழுதாக பணம் கட்டிமுடித்தப் பிறகும் '4-வது மாதத் தவணை மூன்று நாள்கள் தாமதமாகக் கட்டியிருக்கிறீர்கள். அதற்காக அபராதத் தொகை' எனப் பல்வேறு காரணங்களைக் கூறி சுரண்டல் நடக்கிறது. 0% இன்ஸ்ட்ரஸ்ட் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என ஆர்.பி.ஐ கூறியிருந்தும் இன்றும் பல நிறுவனங்கள் அதைப் பயன்படுத்துகிறது.

எனவே, இந்த நிதி நிறுவனங்கள் சமூக சேவைக்காக வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டால், இதற்குப் பின்னால் இருக்கும் லாபவெறி புரியும். அதுதான் அவர்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபட வைக்கிறது. எனவே, ஆர்.பி.ஐ. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் கூறியவைகளையேக் கேட்காத இந்த நிறுவனங்கள், இந்த அரசின் சட்டத்தை பின்பற்றுவார்களா என்பது கேள்விக்குறிதான்.

காவல்துறை

இதுவரை சட்டவிரோதமாக கடன் வசூலில் ஈடுபட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர் கைது என ஒரு செய்தியைக் பார்த்ததுண்டா? எனவே, இந்த சட்டம் அமலுக்கு வந்தப்பிறகு, அரசு அதை எப்படி வலிமையாகப் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்துதான் இது எப்படி பலன் தரும் என்பது தெரியவரும்" என்றார்.

``கடந்த சில வருடங்களாக செயலிகள் மூலம் கடன் வாங்குவதும், கொடுப்பதும் அதிகமாகியிருக்கிறது. அவசரத் தேவைக்காக தேவைக்கு மேல் கடன் வாங்குவதும் கொடுப்பதும் அதிகரித்திருக்கிறது. கடன் வாங்கியவர்கள் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தக் கடனை வசூலிப்பதும் அவசியம். அப்போதுதான் பிறருக்கு கடன் கொடுத்து அந்த நிறுவனம் வளர முடியும்.

ஆனால், அதற்கென சில வரைமுறைகள் இருக்கிறது. அதை மீறி சட்ட விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடும்போதுதான் இந்த விவகாரங்கள் சிக்கலாகுகிறது. இதுபோன்ற செயல்களில் பெரும் நிறுவனங்கள் ஈடுபடுவதில்லை. சிறு நிறுவனங்கள்தான் இந்தக் குற்றங்களில் ஈடுபடுகின்றன. இந்த சட்டம் வருவதற்கு முன்பே, ஒவ்வொரு மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப சில சட்டங்களை வகுத்திருக்கிறது.

எம்.பாலச்சந்திரன்
எம்.பாலச்சந்திரன்

ஏஜெண்ட்கள் மூலம் வசூல்தான் சிக்கலின் ஆரம்பம்.

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் NBFC – Non-Banking Financial Company, HFC – Housing Finance Company, RRB – Regional Rural Bank போன்ற நிறுவனங்களுக்கு 2008-லிருந்தே ஆர்.பி.ஐ கடன் வசூல் தொடர்பாக வரைமுறைகளை, கோட்பாடுகளை கொடுத்து வருக்கிறது. இதைச் சரியாக அந்தந்த நிறுவனங்கள் செயல்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக ஏஜெண்ட்கள் மூலம் கடன் வசூல் செய்யத் தொடங்கியபோதுதான் இந்த விவகாரம் மேலும் தீவிரமானது.

ஏஜெண்டுகள் வசூல் செய்யும் தொகையிலிருந்துதான் அந்த ஏஜெண்டுகளுக்கு கமிஷன் கிடைக்கும் என்பதால், அடாவடிகள் தொடங்கியது. அதனால்தான் இந்தச் சட்டம் கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் தண்டனைகள் சற்று கூடுதலாக இருப்பதாக தோன்றுகிறது. இந்த சட்டத்தை மக்களும் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க சரியான முறையில் அரசு கவனிக்க வேண்டும்." என இந்த சட்டத்தை வரவேற்று பேசினார் முன்னாள் வங்கி மேலாளரும், சாஸ்விதா ஹோம் பைனான்ஸ் நிறுவன தலைவருமான எம்.பாலச்சந்திரன்.

`ஏற்கெனவே ஆர்.பி.ஐ, உயர் நீதிமன்றம், உச்ச நிதிமன்றம் உறுதியான வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது. அதையே சரியாக செயல்படுத்தினாலே போதுமே... ஏன் தனியாக சட்டம் இயற்ற வேண்டும்?' என்றக் கேள்வியுடன் தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

``ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் இருக்கிறது. அதை சரியாக நிறைவேற்றாத நிறுவனங்களை சட்டப்பூர்வமாக அணுக அரசுக்கு ஒரு பிடிமானம் வேண்டும் என்பதால் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நியாயமான முறையில், அரசும், ஆர்.பி.ஐ-யும் காண்பித்தகிருக்கும் வழிகாட்டுதலின் படி ஒரு நிறுவனம் கடனை வசூலிக்கிறது என்றால், அவர்களுக்கு இந்தச் சட்டத்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்குதான் இந்தச் சட்டம் அச்சத்தை ஏற்படுத்தும்.

சிலர் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி ஏமாற்ற முடியும் என்ற சந்தேகம் இருக்கலாம். ஒருவருக்கு ஒரு நிறுவனம் கடன் கொடுக்கிறது என்றால், அவரின் பின்புலம், அவரின் வருமானம், அவரால் இந்தப் பணத்தை சரியாக திரும்பக் கொடுக்க முடியுமா என்பதையெல்லாம் விசாரித்து, உறுதிப்படுத்தியப் பிறகுதான் கடன் கொடுப்பார்கள். அப்படியும் சிலர் ஏமாற்றுகிறார்கள் என்றால் அதை சட்டப்படி அணுக வேண்டுமே தவிர சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

ஏழைகளுக்கு, பெண்களுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட எல்லா சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்துவர்கள் என்றக் குற்றச்சாட்டு எப்போதும் எழும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராகவும் இப்படித்தான் பேசினார்கள். பல சங்கங்களின், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பல ஆலோசனைகளுக்குப் பிறகுதான் ஒரு சட்டம் நிறைவேற்றப்படும். அப்படித்தான் இந்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது." என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு...

``இந்த சட்டம் சரியாக செயல்படுத்த வேண்டுமானால், இருப்பவர்கள் - இல்லாதவர்கள் என எந்த வேறுபாடும் பார்க்காமல், இது தொடர்பான புகார்கள் வரும்போது காவல்துறை சரியாக இதைக் கையாள வேண்டும். உண்மையான புகார் என்ன என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு இப்போது காவல்துறையிடமும் வந்திருக்கிறது. இந்தச் சட்டம் தொடர்பான அதிகாரிகள் இதை முழுமையாக கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் இந்தச் சட்டம் மக்களுக்கு பயனளிக்கும்" என்கிறார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கருணாநிதி.

'பஸ்ஸைப் பாதியில் நிறுத்தி டிரைவர் தொழுகை' - வைரல் வீடியோ; அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

கர்நாடகாவில் ஹூப்பள்ளி - ஹவேரி சாலையில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் சாலையோரமாகப் பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகை செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிரைவர் சீட்டிற்குப் பின் இருக... மேலும் பார்க்க

"என் கணவர், குழந்தைகளுடன் வாழ உதவுங்கள்" - புதுச்சேரி முதல்வரிடம் உதவி கேட்கும் பாகிஸ்தான் பெண்

ப்பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டிருக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் அதற்கான ஆணையை அனுப்பி வைத்திருக்கிறது. அதன் ... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: "அதிகாரம் இருந்தும் திமுக செய்யவில்லை; ஆனால், மத்திய அரசு செய்கிறது" - ஓபிஎஸ்

நேற்று சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்ததை வரவேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அ... மேலும் பார்க்க

கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் என்ன?

அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. அதாவது மே 4-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை உள்ளது. அதற்குள்ளேயே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், 'பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்படு... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: ``2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது" - மநீம தலைவர் கமல்ஹாசன்

நீண்ட கால எதிர்க்கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந... மேலும் பார்க்க