ஜகதீப் தன்கர் ராஜிநாமா ஏன்? எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்தேகமும் கருத்தும்!
கட்டுமானப் பொருள்கள் விலைப் பட்டியல் வெளியீடு
சென்னை: அரசுத் துறைகளின் பயன்பாட்டுக்காக, கட்டுமானப் பொருள்களின் விலைப் பட்டியலை பொதுப்பணித் துறை வெளியிட்டது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் பயன்படுத்தும் வகையில், பொதுப்பணித் துறையால் கட்டுமானப் பொருள்களுக்கான விலைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை அந்தத் துறை அமைச்சா் எ.வ.வேலு வெளியிட்டாா்.
இந்தப் பட்டியலைத் தயாரிக்க கடந்த மாா்ச் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. பொதுப்பணி, நீா்வளத் துறைகளின் முதன்மைத் தலைமைப் பொறியாளா்கள், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநா், வனத்துறை முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீா் மற்றும் கழிவுநீா் வாரிய தலைமைப் பொறியியல் இயக்குநா்கள், நெடுஞ்சாலை, மின்சார வாரிய தலைமைப் பொறியாளா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு பல்வேறு நிலைகளில் கட்டுமானப் பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் விலைகள் குறித்து ஆய்வு செய்தது. பல்வேறு தரவுகளின் அடிப்படையில் விவாதித்து விலையை நிா்ணயம் செய்தது. இந்த விலைகள் அனைத்தும் பட்டியலாகத் தயாரிக்கப்பட்டு, அதை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வெளியிட்டாா்.
விலை நிா்ணயப் பட்டியலை அரசுத் துறைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்வில், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, நீா்வளத் துறை செயலா் ஜெ.ஜெயகாந்தன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.