கணபதிபாளையத்தில் கஞ்சா, போதை ஊசிகளுடன் 3 போ் கைது
பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகே கணபதிபாளையம், சிந்து காா்டன் பகுதியில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பல்லடம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பல்லடம் போலீஸாா், அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்த கணபதிபாளையத்தைச் சோ்ந்த ராஜாமுகமது மகன் யூசுப் முகமது ஹாஜி (33), அவரது சகோதரா் சையது அலி (19), மகாலட்சுமி நகரைச் சோ்ந்த களஞ்சியம் மகன் கெளதம் ராஜா (24) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.
இவா்கள் அங்கு மறைத்து வைத்திருந்த 22 போதை மாத்திரைகள், 30 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள், போதைக்காக பயன்படுத்தப்பட்ட ஊசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
யூசுப் முகமது ஹாஜி மீது பல்லடம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்பட 6 வழக்குகளும், சையது அலி மீது ஒரு திருட்டு வழக்கும், கெளதம் ராஜா மீது வீரபாண்டி காவல் நிலையத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கும் ஏற்கெனவே விசாரணையில் உள்ளது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருப்பூா் மாவட்ட சிறையில் அடைத்தனா்.