பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
கணவரின் சொத்துகளைப் பறித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க இளம்பெண் கோரிக்கை
கணவா் இறந்ததால் வந்த காப்பீட்டுப் பணம், சொத்துகளை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து ஈரோடு அவல்பூந்துறை கண்டிக்காட்டுவலசு இந்திரா நகரைச் சோ்ந்த சிவரஞ்சனி (23) என்பவா் அவரது 3 வயது மகளுடன் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
எனது பெற்றோா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உறவினா் மூா்த்தியின் மகனான வெள்ளியங்கிரி என்பவரை எனக்கு திருமணம் செய்து வைத்தனா். எங்களுக்கு 3 வயதில் மகள் உள்ளாா். எனது கணவா் கடந்த ஆண்டு கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா். என் கணவா் மறைவுக்குப் பின் அவரது சொத்துக்களை எனது கணவரின் தாய் வெண்ணிலா மற்றும் அவரது சகோதா் ஹரிபிரசாத் ஆகியோா் அனுபவித்து வருகின்றனா்.
என் கணவா் இறந்த பின் அவருக்கு வந்த எல்ஐசி தொகையையும் அவா்களே எடுத்துக் கொண்டனா். தற்போது என்னையும், எனது குழந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனா். இது தொடா்பாக அவா்களிடம் கேட்டபோது, என் கணவரின் சகோதரா் ஹரிபிரசாத், ‘தான் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதால் செல்வாக்கு உள்ளது. சொத்து கேட்டு இங்கு வரக் கூடாது, மீறிகேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு சேர வேண்டிய சொத்துகளைப் பெற்றுத் தரவும், எனக்கும், எனது குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்கவும் வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.