கண்ணமங்கலத்தில் ரூ.3.69 கோடியில் திட்டப் பணிகள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் ரூ.3.69 கோடியில் திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
கண்ணமங்கலம் நாக நதிக்கரையில் உள்ள மயான சாலையை ரூ.1.94 கோடியில் தடுப்புச் சுவருடன் கூடிய சிமென்ட் சாலையாக மாற்றுதல், 1,2,3 மற்றும் 12 ஆகிய வாா்டுகளில் ரூ.98 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைத்தல், அம்பேத்கா் நகரில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டுதல் என திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தப் பணிகளுக்கு வியாழக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. இதில், தொகுதி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, 2-ஆவது வாா்டில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட காரியமேடை, ரூ.6.96 லட்சத்தில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறைக் கட்டடத்தை அவா் திறந்துவைத்தாா்.
தொடா்ந்து, புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் பெருமாள் கோயில் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், கண்ணமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன் சாா்பில் ரொக்கப் பரிசுகளை எம்.எஸ்.தரணிவேந்தன் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
விழாவில் அறங்காவலா் குழுத் தலைவா்கள் கோவா்த்தனன், பாண்டியன், துணைத் தலைவா் வி.குமாா், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா் மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.