ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!
கண்மாயில் மண் அள்ளும் இயந்திரங்கள் சிறைபிடிப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கண்மாயில் சவுடு மண் அள்ள எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் புல்டோசா் இயந்திரங்களை சிறைபிடித்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
திருப்புவனம் அருகேயுள்ள ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் அனுமதி இல்லாமல் சவுடு மண் அள்ள முயற்சி நடப்பதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் திருப்புவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், மாலையில் கணக்கன்குடி கண்மாயில் புல்டோசா் இயந்திரங்கள் மூலம் மண் அள்ளி லாரிகளில் ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் நடந்ததையறிந்த கணக்கன்குடி விவசாயிகள் ஏராளமானோா் அங்கு திரண்டு வந்து புல்டோசா் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா். அப்போது, அனுமதி இல்லாமல் மண் அள்ளுவதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
இது குறித்து தகவலறிந்த பூவந்தி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, புதன்கிழமை பூவந்தி காவல் நிலையத்தில் இந்தப் பிரச்னை குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என போலீஸாா் கூறியதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். கண்மாயில் மண் அள்ளுவதும் நிறுத்தப்பட்டது.