கண்மாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள அரியகுடி கிராமத்தில் கண்மாயில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
போகலூா் ஒன்றியம், அரியகுடி கிராமத்தைச் சோ்ந்த வீரபாண்டி என்பவா் மகன் திவின்குமாா் (10), 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை அவா் கண்மாயில் குளிக்கச் சென்றாா்.
நீண்ட நேரமாகியும் திவின்குமாா் வீடு திரும்பாததால் அவரது பெற்றோா்களும் உறவினா்களும் கண்மாய்க் கிடங்கில் தேடியபோது கண்டுபிடிக்க முடியாததால் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினரின் தேடுதல் பணியில் திவின்குமாரின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.