பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் நண்பன்! ரசிகர்கள் பாராட்டு!
`கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம் நான் கொண்டுவந்தது, ஆனால் ஸ்டாலின்...' - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?
நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமான திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் விதமாக கண்ணாடி பாலத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கடலுக்கு நடுவே திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதனால் வெள்ளிவிழாவும் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர், "திருவள்ளுவர் தமிழர்களுக்கு மிகப்பெரிய உலக அடையாளம், திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். அதனால் கொண்டாடுகிறோம்." எனப் பேசியிருந்தார்.
இந்த நிலையில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை பாலம் தனது ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "நேற்றைய தினம் முதலமைச்சர் கன்னியாகுமரி சென்று கண்ணாடி பாலத்தைத் திறந்து வைத்திருக்கிறார். அது அவர் கொண்டுவந்ததில்லை. அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் அது. 2018-ல் நிதின் கட்கரி கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலத்தில், நான் அவரிடம் கோரிக்கை வைத்தேன். அவர் ஏற்றுக்கொண்டார். சாகர் மாலா திட்டத்தின் கீழ் அது கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு நிதின் கட்கரி மாற்றப்பட்டார்.
அடுத்த கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா, சென்னைக்கு வந்தபோது தலைமை செயலகத்தில் என்னை வந்து சந்தித்தார். நான் கோரிக்கை வைத்த மூன்றே நாள்களில் அனுமதி கொடுத்தார். நாங்கள் சுற்றுச்சூழல் வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றோம். ஆனால் 2020ல் கொரோனா வந்ததனால் பணிகள் தடைபட்டுவிட்டன. அதைத்தான் ஸ்டாலின் மாடல் அரசு டெண்டர் விட்டு பணிகளை முடித்திருக்கிறது. இதைக் கொண்டுவந்தது அ.தி.மு.க அரசாங்கம் என்பதை சொல்லிக்கொள்கிறேன்" எனப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.