கமுதியில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டி
கமுதியில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் குறு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சிவா அருணா தலைமை வகித்தாா். மாவட்ட உடல்கல்வி அலுவலா் வசந்தி, ராமநாதபுரம் கல்வி மாவட்ட அலுவலா் சங்கா், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலா் சேதுராமு, கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மாரிமுத்து, கமுதி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். 14, 17, 19 வயதுப் பிரிவுகளில் மாணவா்களுக்கான 100 மீ, 200 மீ, 1,500 மீ. ஓட்டம், தொடா் ஓட்டம் உள்ளிட்டப் போட்டிகள் நடைபெற்றன. இதையடுத்து வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, போட்டிகள் தொடங்கும் முன் சமாதானப் புறா பறக்கவிடப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை மணற்கேணி செயலி ஒருங்கிணைப்பாளா் சி. கிருஷ்ணமூா்த்தி செய்தாா். ராமசாமிபட்டி உடல்கல்வி ஆசிரியை சாரதா நன்றி கூறினாா்.