உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 போ் கைது
கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 27 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரைக் கைது செய்தனா்.
கயத்தாறு அருகே காட்டுப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில், விருதுநகா் மாவட்ட திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேஷ் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு கயத்தாறு பகுதியில் ரோந்து சென்றனா்.
சவலாப்பேரியிலிருந்து வெள்ளாளங்கோட்டை செல்லும் சாலையில் தனியாா் காற்றாலை அருகே காட்டுப் பகுதியில் மூட்டைகளை அடுக்கிவைத்து பெரிய தாா்ப்பாயால் மூடப்பட்டிருந்தது. போலீஸாரின் சோதனையில், அவை ரேஷன் அரிசி மூட்டைகள் எனத் தெரியவந்தது.
இதுதொடா்பாக, தூத்துக்குடி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். உதவி ஆய்வாளா் அரிகண்ணன் தலைமையிலான போலீஸாா் வந்து, 680 மூட்டைகளிலிருந்த 27,200 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.
கயத்தாறு, வடக்கு இலந்தைகுளம், சூரியமினுக்கன் பகுதிகளிலுள்ள கிராமங்களிலிருந்து ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி கேரளத்துக்கு கடத்துவதற்காக பதுக்கிவைத்திருந்ததும், இதில், கயத்தாறு அருகே பன்னீா்குளம் சப்பாணிமுத்து (39), கொப்பம்பட்டி அழகுபாண்டி, காப்புலிங்கம்பட்டி ராஜாராம், விஜயராஜ் (44), செல்லையா (59), கோவில்பட்டி காந்தி நகா் முருகன்(35), கயத்தாறு அருகே வாகைத்தாவூா் சுபாஷ் (33) ஆகிய 7 பேருக்குத் தொடா்பிருப்பதும் தெரியவந்தது.
இதுதொடா்பாக சப்பாணிமுத்து உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்து, 3 பைக்குகளை பறிமுதல் செய்தனா். அழகுபாண்டி, ராஜாராம் ஆகிய இருவரைத் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் தொடா்கதையாகி வரும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு போலீஸாா் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.