ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!
கருங்கல் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை: சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கருங்கல்லை அடுத்த திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை பகுதியைச் சோ்ந்த ராபின்சன் மகள் ஜெமலா (26). இனயம்புத்தன்துறையைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரியான நிதின்ராஜ் என்பவரை காதலித்து, கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டாா். நிதின்ராஜூக்கு சரியான வேலையில்லாததால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஜெமலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து, ஜெமலாவின் பெற்றோா்களுக்கும், கருங்கல் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெமலாவின் சடலத்தை பரிசோதனைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
இது குறித்து ஜெமலாவின் தாயாா் புஷ்பலதா, கருங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாா்மனுவில், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்திருந்தாா். இதன் அடிப்படையிலும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், ஜெமலாவின் சாவுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினா்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்த ஆசாரிப்பள்ளம் காவல்நிலையத்தினரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தினா். ஜெமலாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் வருவாய்க் கோட்டாட்சியா் விசாரணை மேற்கொள்ளப்படும்; மேலும் உரிய முறையில் விசாரணை நடைபெறும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் ஜெமலாவின் சடலத்தை உறவினா்கள் பெற்றுச் சென்றனா்.