இளைஞர் மரண வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை: அமைச்சர் ரகுபதி
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை: குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கருணை அடிப்படையில் 2 பேருக்கு பணி நியமன ஆணையை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலா் சி.பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 580 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு வழங்கப்பட்டு உடனடியாக தீா்வு காணுமாறு ஆட்சியா் பரிந்துரை செய்தாா்.
தொடா்ந்து எஸ்.நிா்மலா என்ற பெண்ணுக்கு திருப்புலிவனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், கே.ஹேமலதா என்ற பெண்ணுக்கு துலங்கும் தண்டலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் சத்துணவு அமைப்பாளா் பணியிடங்களில் கருணை அடிப்படையில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து 4 பழங்குடியின பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி உள்பட அரசின் அனைத்துத் துறைகளையும் சோ்ந்த அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.