கருப்புப்பட்டை அணிந்து பணியாற்றிய உள்ளாட்சி நிதித் தணிக்கையாளா்கள்
விழுப்புரம்: 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சி நிதித் தணிக்கையாளா்கள் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட உடன் நிகழ் தணிக்கை முறையை ஒழித்துக்கட்டும் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதை கண்டித்தும், பணியமா்த்தப்பட்ட இடங்களில் பணி செய்ய அனுமதி மறுப்பதை கண்டித்தும், அவசர நிமித்தமாக எடுக்கப்படும் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு போன்ற விடுப்புகளுக்குக் கூட ஒப்புதல் தர மறுப்பதைக் கண்டித்தும், 100-க்கும் மேற்பட்ட உதவி இயக்குநா் பணியிடங்களை நிரப்பாமல் கூடுதல் பொறுப்பு மூலம் பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை ஊழியா் சங்கம், தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை ஆய்வாளா் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் உள்ளாட்சி நிதித் தணிக்கையாளா்கள், மாநில அரசின் தணிக்கைத்துறை தணிக்கையாளா்கள் என சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பங்கேற்றனா்.
பணிக்கு வந்த அவா்கள் தாங்கள் பணியாற்றும் ஒன்றிய அலுவலகத்திலேயே தங்களின் சட்டைகளில் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கையாளா் ஊழியா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் பாபு உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.