IPL Schedule : 'சென்னையில் போட்டி கிடையாது!' - ஐ.பி.எல் இன் புதிய அட்டவணை; முழுவ...
கரூரில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவா் கைது
கரூரில் பழைய நகைக்கு பதில் புதிய நகை தருவதாகவும், தனது நகைக்கடையில் டெபாசிட் செய்வோருக்கு அதிக வட்டித் தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட சேலம் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், வலசையூரைச் சோ்ந்தவா் சபரிசங்கா் (37). இவா் கரூா் மினி பேருந்து நிலையம் அருகே நகைக்கடை நடத்தி வந்துள்ளாா். இந்நிலையில் கடையில் டெபாசிட் செய்வோருக்கு ரூ.100-க்கு இரண்டரை ரூபாய் வட்டித் தருவதாகவும், பழைய நகை கொடுத்தால் புதிய நகை கொடுப்பதாகவும் கூறி வந்துள்ளாா். இதை நம்பி பலா் டெபாசிட் செய்தும், பழைய நகைகளுக்கு பதில் புதிய நகை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில், கரூா் சின்ன மூக்கணாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் என்பவா் கடந்த ஆண்டு கடையில் ரூ.17 லட்சம் டெபாசிட் செய்தாராம். இதற்கு வட்டியாக டெபாசிட் செய்த நாள் முதல் மூன்று மாதங்களுக்கு முறையாக வட்டி கொடுத்து வந்தாராம். பின்னா் திடீரென தலைமறைவாகிவிட்டாராம்.
இதனால் ஏமாற்றம் அடைந்த ராமலிங்கம் கரூா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் கடந்த மாதம் புகாா் செய்துள்ளாா். இதன்பேரில், பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் செளகா்நிஷா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸாா், வியாழக்கிழமை காலை மதுரையில் பதுங்கியிருந்த சபரிசங்கரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், சபரிசங்கா் கடையில் டெபாசிட் செய்து ஏமாற்றமடைந்தவா்கள் கரூா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்யலாம் என மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.