கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா
உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் ஹேமலதா செங்குட்டுவன் முன்னிலை வகித்தாா். விழாவில் மாநகராட்சி மேயா் கவிதாகணேசனுக்கு ஆளுமை வித்தகா் விருதும், கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் மருத்துவா் வி.லோகநாயகிக்கு மருத்துவ சிகாமணி விருதும், கரூா் பிரம்மகுமாரிகள் அமைப்பின் இயக்குநா் பி.கே.சாரதாவுக்கு ஆன்மிகச்சுடா் விருதும், கரூா் மாவட்ட சைபா் கிரைம் சிறப்பு உதவி ஆய்வாளா் பி.லலிதாவுக்கு தொழில்நுட்ப சேவகி விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கரூா் மாவட்ட நீதித்துறை சாா்பில் மகளிா் தின விழா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை கூடுதல் மாவட்ட நீதிபதி தங்கவேல் தொடங்கி வைத்தாா். விழாவில் நீதிமன்ற பெண் பணியாளா்களுக்கும் மற்றும் பெண் வழக்குரைஞா்களுக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நீதிபதிகள் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு- நீதிபதியுமான அனுராதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்து, பெண்களுக்கான இலவச உதவி மையம் மற்றும் காவல் உதவி செயலி மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் கரூா் மாவட்ட பெண் காவல் அதிகாரிகள், காவலா்கள் மற்றும் காவல்துறை அமைச்சு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
மினி மாரத்தான்: இதேபோல பெண்களுக்கான இலவச உதவி மைய எண்.181 மற்றும் காவல் உதவி செயலி மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம்பந்தமாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கா. பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தாா். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்காவலா்கள் ,ஊா்க்காவல்படையினருக்கு 5 கி.மீ. மினி மாரத்தான் போட்டியும், 3 கி.மீ. வாக்கத்தான் போட்டியும் நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.