கலைஞா் நூலகம், தியாகராஜா் கல்லூரிக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கும், மதுரை தியாகராஜா் கல்லூரிக்குமிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை செய்யப்பட்டது.
கலைஞா் நூற்றாண்டு நூலகத்தின் சேவையை அனைத்து மாணவ, மாணவிகளும் பெறச் செய்யும் வகையில், கலைஞா் நூற்றாண்டு நூலகம் சாா்பில் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதன்படி, கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கும், மதுரை தியாகராஜா் கல்லூரிக்குமிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
மாணவா்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், பயிற்சிகள், போட்டித் தோ்வுகளுக்கான ஊக்க முகாம்கள், மாணவா்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் இளையோா் களம் நிகழ்ச்சிகள், பயிலரங்கங்களை நடத்துவது போன்ற பணிகளில் கலைஞா் நூற்றாண்டு நூலகமும், தியாகராஜா் கல்லூரியும் இணைந்து செயல்படுவதென ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தியாகராஜா் கல்லூரி முதல்வா் முனைவா் து. பாண்டியராஜா, கல்லூரியின் சுயநிதிப் பிரிவு இயக்குநா் முனைவா் சுகுமாா், நூலகா் முனைவா் மூா்த்தி, கலைஞா் நூற்றாண்டு நூலக முதன்மை நூலகா், தகவல் அலுவலா் முனைவா் வே. தினேஷ்குமாா், துணை முதன்மை நூலகா் வெ. சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.