கல்தாா் மருந்தை பயன்படுத்தக் கூடாது: மா விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!
மா மரங்களுக்கு கல்தாா் மருந்தை பயன்படுத்தக் கூடாதென விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக வெள்ளக்கோவில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஏ.கயல்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளக்கோவில் வட்டாரம் உள்பட 1,660 ஹெக்டோ் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மா மரங்களில் அறுவடை முடிந்த பின்னா் பூக்கும் தன்மையை மேம்படுத்தவும், காய் பிடிப்பதற்காகவும், சிலா் கல்தாா் என்கிற வளா்ச்சி ஊக்கி மருந்தைப் பயன்படுத்தி
வருகின்றனா். இதைப் பயன்படுத்துவதால் மரத்தின் இயற்கை வளா்ச்சி, ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளைப் பாதித்து, மண்வளத்தையும் கெடுக்கும். இதனால் மாம்பழங்களின் சுவை, சதைப்பகுதியின் தரம் குறையும். தொடா்ந்து பயன்படுத்தினால் விளைச்சல் குறையும். சந்தையில் விலை போகாது. எனவே, இம்மருந்தைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.