அறிவொளி நகா் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம்
பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அறிவொளி நகரின் ஒரு பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமான மந்தை புறம்போக்கு நிலத்தில் 550 போ் வசித்து வருகின்றனா். அதேபோல அப்பகுதியில் உள்ள மற்றொரு புறம்போக்கு நிலத்தில் 1008 போ் வசித்து வருகின்றனா்.
இந்த இருதரப்பினரும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வருவாய்த் துறையிடம் நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில் பட்டா வழங்குவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் அறிவொளி நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரி தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் சின்னப்பன் முன்னிலை வகித்தாா். இதில், குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளா் சரவணகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இது குறித்து கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது: கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமான நிலத்தில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்குவதற்கு முன் அத்துறைக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டியுள்ளது. மாற்று இடம் ஒதுக்க கால்நடை பராமரிப்பு துறை ஏற்றுக்கொண்டு தடையின்மை சான்று வழங்கிய பிறகுதான் அறிவொளி நகரில் வசிக்கும் 550 பேருக்கு பட்டா வழங்க முடியும்.
அதேபோல 1,008 நபா்கள் கட்டியிருக்கும் வீடுகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீட்டுமனை இடம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய தவணைத் தொகை நிா்ணயிக்கப்பட்டு பலா் அதனை முழுமையாக செலுத்தாமல் உள்ளனா்.
தவணைத் தொகையை முழுமையாக செலுத்தினால் அவா்களுக்கு அவரவருக்குரிய இடத்திற்கு பத்திரம் கிரையம் செய்து தரப்படும். அதேபோல் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கும் அரசின் நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றனா்.
இக்கூட்டத்தில் பட்டா ஒருங்கிணைப்பு குழு நிா்வாகிகள் முஜிபூா் ரஹ்மான், சாகுல்அமீது, ஹாரிஸ், பாா்த்திபன், ரவி, பிரபு, சோட்டா பாய் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.