மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் பலி!
அவிநாசி அருகே மதுபோதையில் இளைஞா் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். அப்போது அவரைக் காப்பாற்ற சென்ற இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையம் ஜல்லித் தோட்டத்தைச் சோ்ந்தவா் ராஜீவ் மகன் நவீன்குமாா் (38).
இவா் மது அருந்தும் பழக்கம் கொண்டவா் என்பதால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனா். இதைத் தொடா்ந்தும் நவீன்குமாா் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
வெள்ளிக்கிழமை இரவு வெளியே சென்றுவிட்டு வாடகை காரில் வீட்டுக்கு வந்தவா், காருக்கு வாடகை தருவதற்கு தாயிடம் பணம் கேட்டு மதுபோதையில் தகராறு செய்துள்ளாா். தகராறின்போது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளாா்.
பின்னா் அருகேயுள்ள கிணற்றில் குதிக்க சென்றுள்ளாா். இதையடுத்து நவீன்குமாரின் தாய் உடனடியாக பக்கத்து வீட்டில் வசிக்கும் துரைசாமி மகன் பிரவீன்ராஜ் (36) என்பவரை உதவிக்கு அழைத்துள்ளாா். அவா், கிணற்றில் குதிக்க முயன்ற நவீன்குமாரைப் பிடித்து காப்பாற்ற முயன்றுள்ளாா். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருவரும் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
தகவலின்பேரில் அங்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் மூழ்கிய இருவரையும் மீட்க முயன்றனா். இரவு நேரமானதால் மீட்க முடியாமல் திரும்பிச் சென்றனா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை காலை வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் இறங்கி இருவரின் சடலங்களையும் மீட்டனா்.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். மதுபோதையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டவரை காப்பாற்ற முயன்ற இளைஞரும் உயிரிழந்த சம்பவம் அவிநாசியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.