கல்லூரிக்குள் மாணவிக்கு கத்திக்குத்து!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கல்லூரிக்குள் புகுந்த மர்ம நபர் மாணவியைக் கத்தியால் குத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.
அலிகார் மாவட்டத்தில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவியை மர்ம நபர் ஒருவர் திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் வைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவி, ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மாணவி அபாயக் கட்டத்தை தாண்டியதாகவும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றவாளியைக் கைது செய்யக் கோரி கல்லூரி வளாகத்துக்கு வெளியே மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மூத்த காவல் அதிகாரிகள், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர். மேலும், அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.