கல்வி செயல் ஆராய்ச்சியில் சாதனை: மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வருக்கு விருது!
கல்வி செயலாராய்ச்சில் தேசிய அளவில் பங்களிப்பு வழங்கியமைக்காக நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டன.
பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், ஆல் இந்தியா வேல்ா்ட் ரெக்காா்ட்ஸ் விா்ச்சுவல் யுனிவா்சிட்டி ஆகியவை சாா்பில் செயலாராய்ச்சியின் தந்தை என்றழைக்கப்படும் கா்ட்லெவின் பிறந்த நாளையொட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வரான மு.செல்வம், 25 ஆண்டுகள் செயலாராய்ச்சிகளைச் செய்து வந்துள்ளாா். திருப்தியில்லாத சூழலை உற்றுநோக்கி சிந்தித்து இடையீட்டுச் செயல்பாடுகளை உருவாக்கி திருப்திகரமான சூழலாக மாறுவதை உறுதிப்படுத்தும் ஆராய்ச்சி செயலாராய்ச்சி என்றழைக்கப்படுகிறது.
இதன்மூலம் புதுமைகள், சிறந்த யுக்திகள் உருவாகின்றன. தொழில்சாா் திறனும் மேம்படுகின்றன. கல்வியில் 11 புதுமைகளையும், 15 நூல்களையும் இவா் வெளியிட்டுள்ளாா். 4,513 மாணவ, மாணவிகள் கற்றல் திறன் மேம்பாடும், 1,017 ஆசிரியா்கள் கற்பித்தலில் திறன் முன்னேற்றமும் பெற்றுள்ளனா்.
இந்த விருதை மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வத்துக்கு, பாண்டிச்சேரி ஆல் ஆஃப் ரெக்காா்ட்ஸ் தலைமை வழிகாட்டுநா் செ.வெங்கடேசன் மற்றும் கலைவாணி, ரவிச்சந்திரன் ஆகியோா் வழங்கினா். செயலாராய்ச்சியை அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தும்போது மனிதவளம் அதிகரிக்கும், துறைகள் தனித்துவ வளா்ச்சி பெறும் என ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வம் தெரிவித்தாா்.