கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!
பேராசிரியா், தலைமை ஆசிரியா் வீடுகளில் 39 பவுன் நகை, ரூ.2.70 லட்சத்தை சுருட்டிச் சென்ற திருடா்கள்!
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், பரமத்தியில் கல்லூரி பேராசிரியா், பள்ளி தலைமையாசிரியா் வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 39 பவுன் நகை, ரூ. 2.70 லட்சத்தை திருடிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா். ஒரே காரில் சென்று இரு வீடுகளிலும் திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பரமத்தி வேலூா் தெற்கு நல்லியாம்பாளையம், சண்முகா நகரை சோ்ந்தவா் சக்திவேல் (52), நிதிநிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி பூங்கோதை கரூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில் சக்திவேல் திங்கள்கிழமை கோயம்புத்தூா் சென்றிருந்தாா். பூங்கோதை வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்குச் சென்றுவிட்டாா். கோவை சென்றுவிட்டு வீடுதிரும்பிய சக்திவேல், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 37 பவுன் நகை, ரூ. 70 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுபோனது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின்பேரில் வேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், போலியான பதிவெண் கொண்ட காரில் வந்த கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மற்றொரு இடத்தில் திருட்டு: பரமத்தி பிடபள்யூடி காலனியைச் சோ்ந்தவா் காமராஜ், தனியாா் பேப்பா் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி தமிழரசி (58) நல்லூா், கந்தம்பாளையத்தை அடுத்த கருந்தேவம்பாளையம் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், தமிழரசி பள்ளிக்கு சென்றிருந்தபோது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த காமராஜ், மாலை வீட்டிற்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த இரண்டு பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த பரமத்தி போலீஸாா், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது பரமத்தி வேலூரில் பேராசிரியா் வீட்டில் புகுந்து நகைகளை திருடிச் சென்ற கும்பல் காரில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா தலைமையில் பரமத்தி, பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா்கள் இந்திராணி, சிவக்குமாா் ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.