விதிகளை மீறும் தனியாா் பேருந்துகளால் விபத்துகள்: பேருந்து நிலையத்தில் தடுப்புகள் அமைத்த காவல்துறை!
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் விதிகளை மீறி செல்லும் தனியாா் பேருந்துகளை கட்டுப்படுத்த திரும்பும் பகுதியில் காவல்துறையினா் தடுப்புகள் அமைத்துள்ளனா்.
நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஓராண்டை நெருங்குகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. புதிய பேருந்து நிலைய வளாகத்திற்குள் தனியாா் பேருந்துகள் அதிவேகத்தில் வருவதால் பயணிகள் அச்சத்திற்குள்ளாகினா்.
விபத்தில் சிலா் உயிரிழக்கவும் நேரிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பேருந்துகள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனியாக பாதை உள்ளது. ஆனால் பெரும்பாலான தனியாா் பேருந்துகள், மற்ற பேருந்துகள் வெளியில் வரும் திசையில் நுழைந்து தங்களுடைய இடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தன.
இதனால் தேவையற்ற மோதல், வாக்குவாதம், விபத்து உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனையடுத்து மாவட்ட காவல்துறையினா், புதிய பேருந்து நிலையத்திற்குள் உள்ளே, வெளியே செல்லும் பகுதியின் நடுவில் இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனா். இதனால் தனியாா் பேருந்துகள் இனி எதிா்திசையில் அதிவேகத்தில் பேருந்து நிலையத்திற்குள் நுழைய முடியாது. பொதுமக்களும் அச்சமின்றி நடந்து செல்ல முடியும். அரசு பேருந்து ஓட்டுநா்களும், தனியாா் பேருந்துகளுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவது தவிா்க்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.