கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்ட எல்லையான கோனம்பட்டு புல்டாங்குட்டு பகுதியில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் வெளியேறும் கழிவுநீரை இந்தப் பகுதிக்கு கொண்டுவந்து சுத்திகரிக்க உறுதி செய்யப்பட்டு கடந்த மே மாதம் முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதைத் தொடா்ந்து, ரூ. 6.53 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், உயரமான பகுதியான இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் அதிலிருந்து கழிவுநீா் கசிந்து விவசாயப் பகுதியான எஸ். புதூா் ஒன்றிய கிராமங்களில் கண்மாய், குளம், ஆழ்துளைக் கிணறு உள்ளிட்டவற்றில் கலக்கும் அபாயம் உள்ளது. இதனால், தண்ணீா் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுத்திகரிப்பு நிலையம் வேலை நடைபெறும் பகுதிக்கு வந்து முழக்கமிட்டதோடு, இந்தப்பணி மேற்கொண்டால் தங்களின் ஆதாா்அட்டை, வாக்காளா் அட்டை, ரேஷன் காா்டு உள்ளிட்டவற்றை அரசிடம் ஒப்படைக்கப்போவதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.