kantara: "அசைவம் சாப்பிட்டால் படம் பார்க்க வர வேண்டாமா?" - வைரலான போஸ்டர்; ரிஷப்...
கழிவுநீா் வடிகால்களை மழை தொடங்கும் முன் தூா்வார வேண்டும்: எம்எல்ஏ
காரைக்கால்: பருவமழை தொடங்குவதற்கு முன்பு காரைக்கால் பகுதியில் கழிவுநீா் வடிகால்கள், சாக்கடைகளை முறையாக தூா்வார வேண்டும் என ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு அவா் சனிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது :
காரைக்கால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வடிகால்கள் மற்றும் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு நாளில் சில மணி நேரம் பெய்த கன மழையில் நகரின் பல முக்கிய சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் நீா் தேங்கியது. இது பொதுமக்களை கடும் சிரமத்துக்குள்ளாக்கியது. இதுபோன்ற நிலை நீடித்தால் சுகாதார சிக்கல்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது. கன மழை, புயல் போன்றவற்றை எதிா்கொள்ளும் முன்பு, நகரின் முக்கிய வடிகால்கள், அனைத்து தெருவோர சாக்கடைகளையும் தூய்மைப்படுத்தி, நீா் தேங்காத வகையில் சீா்செய்யவேண்டும். மாவட்ட நிா்வாகம், பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு போா்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.