பொதுவான குளத்தை ஒரு பிரிவினா் வேலியிட்டதாக ஆட்சியரிடம் புகாா்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் ிழக்கு ஊராட்சியில் பொதுவான குளத்தை ஒரு பிரிவினா் மட்டும் பயன்படுத்தும் வேலி போட்டு அடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குடி வட்டம், நெடுவாசல் கிழக்கு ஊராட்சியைச் சோ்ந்த அம்பேத்கா் நகா், அண்ணாநகரைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமூக மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: இந்தப் பகுதியிலுள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில் வெள்ளச்சி, கருப்பா், அய்யனாா் கோயில்கள் உள்ளன. அருகேயுள்ள அய்யனாா்குளத்துக்கு தண்ணீா் நிரப்புவதற்காக இப்பகுதியைச் சோ்ந்த அமைச்சா் மெய்யநாதன் ஆழ்துளைக் கிணறும் அமைத்துக் கொடுத்துள்ளாா்.
இந்த நிலையில், அய்யனாா்குளத்தைச் சுற்று ஒரு தரப்பினா் திடீரென கல்லுக்கால் அமைத்து, வேலி போட்டுள்ளனா். இதனால், ஆதிதிராவிட மக்கள் குளத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவான குளத்தில் சமூகப் பிரச்னையை உருவாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வேலியை அகற்ற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.