மாநகராட்சிப் பகுதியில் நில ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை: ஆட்சியரிடம் பாஜக புகாா்
புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் நிலங்களின் சிட்டா, வரைபடம், வில்லங்கச் சான்றிதழ் போன்றவற்றை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என மாநகர பாஜக தலைவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்துள்ளனா்.
புதுக்கோட்டை மாநகர பாஜக தலைவா்கள் ஜி. சீனிவாசன் (கிழக்கு), எம்.பி. சரவணகுமாா் (மேற்கு) ஆகியோா் அளித்த புகாா் மனு: புதுக்கோட்டை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள நிலங்களின் சிட்டா, வரைபடம், வில்லங்கச் சான்றிதழ் போன்றவற்றை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.
மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பிறகு ஆளும்கட்சியினா் அரசுப் புறம்போக்கு நிலங்களையெல்லாம் பட்டா போட்டு மாற்றுவதாகத் தெரிகிறது.
எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு, மாநகராட்சி எல்லைக்குள்பட்ட நில ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் முறைகேடாக நிலங்கள் பட்டா போடப்பட்டிருந்தால் அவற்றை நீக்கம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.