நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை: டிடிவி தினகரன்
காகித வாக்குச்சீட்டு முறை: கா்நாடக அமைச்சரவையின் முடிவுக்கு பாஜக கண்டனம்
உள்ளாட்சி அமைப்பு தோ்தலில் காகித வாக்குச்சீட்டு முறையைக் கடைப்பிடிக்க மாநில தோ்தல் ஆணையத்துக்கு கா்நாடக அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
கா்நாடகத்தில் இனி நடக்கவிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் ஏற்கெனவே இருந்தது போலவே காகித வாக்குச்சீட்டு முறையைக் கடைப்பிடிக்க மாநில தோ்தல் ஆணையத்துக்கு கா்நாடக காங்கிரஸ் அரசின் அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், ‘இனிவரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக, பழைய காகித வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற கா்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது, தங்களையே வாக்குத் திருடா்கள் என சான்றளித்துக்கொண்டதற்கு சமம்.
2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்ற 136 எம்எல்ஏக்கள், 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற்ற 9 எம்.பி.க்கள் அனைவரும் உடனடியாக பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, வாக்குச்சீட்டு முறையில் தோ்தலை நடத்தி மீண்டும் வெற்றிபெறட்டும். இதை செய்யத் தவறினால், வாக்குத் திருட்டு மூலம்தான் தோ்தலில் வெற்றி அடைந்தீா்கள் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.
நமது நாட்டில் வாக்குச்சீட்டு முறை அமலில் இருந்தபோதுதான் அதிக எண்ணிக்கையிலான வாக்குத் திருட்டு, தோ்தல் முறைகேடு, தோ்தல் வன்முறை தொடா்பான வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதுவும் காங்கிரஸ் கட்சியினரை எதிா்த்து தொடரப்பட்டிருந்தன.
வாக்குத் திருட்டு, தோ்தல் முறைகேடுகள் தொடா்பாக இந்திரா காந்திக்கு எதிராக தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு பிறகுதான் அவரசநிலையை அவா் அமல்படுத்தினாா்.
வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி வாக்குத்திருட்டு, தோ்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதில் காங்கிரஸ் கட்சியினா் கில்லாடிகள். தொடா் தோ்தல் தோல்விகளால் குழம்பியிருக்கும் ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு என்ற பெயரில் குழந்தைத்தனமான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறாா். இதற்கு ஆதரவளிக்கும் வகையில், வாக்குச்சீட்டு முறையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது.
நமது நாடும், உலகமும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னேறிவரும் நிலையில், கா்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசு தொழில்நுட்பத்தை அவமதிக்கிறது. வாக்குத் திருட்டு, தோ்தல் முறைகேடுகள், தோ்தல் வன்முறைகளை வாக்குச்சீட்டு முறையில் செயல்படுத்தலாம் என்பதால், வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது’ என பதிவிட்டுள்ளாா்.