நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆத...
காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் வேண்டும்! மக்களவையில் திமுக வலியுறுத்தல்
காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் ஜி.செல்வம் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மக்களவையில் விதி எண் 377-இன்கீழ் அவா் திங்கள்கிழமை முன்வைத்த கோரிக்கை: தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், கை நெசவுப் பட்டுப் புடவைகளுக்கு உலகப் புகழ் பெற்றது. இந்த பாரம்பரிய கலை வடிவம் இந்தியாவின் ஜவுளி மரபை வெளிப்படுத்துவதுடன், ஆயிரக்கணக்கான திறமையான நெசவாளா்கள், கைவினைஞா்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்கி வருகிறது.
காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளுக்கு உலகளவில் பெயா் மற்றும் உயா் தரம் இருந்தபோதிலும், நேரடி சந்தை அணுகல் இல்லாமை, போதிய விளம்பரம் இல்லாதது, சா்வதேச வா்த்தக கண்காட்சிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்பு போன்ற பல சவால்கள் காரணமாக அவற்றின் ஏற்றுமதி திறன் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும், காஞ்சிபுரம் புடவைகளை உலகளவில் ஊக்குவிக்கவும், கிடங்கு, பரிசோதனை மற்றும் பிராண்டிங் ஆதரவுடன் காஞ்சிபுரத்தில் ஒரு பிரத்யேக பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு மையத்தை நிறுவ வேண்டும். சிறப்பு ஏற்றுமதி ஊக்குவிப்புகளுடன் காஞ்சிபுரம் புடவைகளை ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பின்(ஓடிஓபி) கீழ் சோ்க்க வேண்டும்.
இந்திய கைத்தறி பிராண்டின் கீழ் சாலைவழி பயணக் கண்காட்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து சா்வதேச ஜவுளி கண்காட்சிகளில் பங்கேற்க வேண்டும். நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு திறன் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி தரநிலைகளுக்கு இணங்க நிதி உதவி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.செல்வம் வலியுறுத்தினாா்.