``யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்தார்கள்..'' - அகிலேஷ் யாதவ் சொல்வது எ...
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, உற்சவா் ஆதிகேசவப் பெருமாள் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கஜேந்திர மோட்சம் நடைபெற்ற பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள புஷ்பவல்லித் தாயாா் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோயில். இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா இந்த மாதம் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை இந்த மாதம் 15-ஆம் தேதியும், தேரோட்டம் 19-ஆம் தேதியும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 8-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் பெருமாள் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருக்கச்சி நம்பிகள் தெரு வழியாக வரதராஜ சுவாமி கோயில் வரை வீதியுலா சென்று திரும்பினாா்.
குதிரை வாகனத்தின்போது மதூா் முகுந்த ராமாநுஜ தாசா் பாகவதா் குழுவினரின் சிறப்பு பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. வரும் 25-ஆம் தேதி இரவு பெருமாள் புஷ்பப் பல்லக்கில் வீதியுலா வரும் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எஸ்கேபிஎஸ். சந்தோஷ்குமாா், கோயில் செயல் அலுவலா் சி.ராஜமாணிக்கம், அறங்காவலா் குழு உறுப்பினா்கள், பட்டாச்சாரியாா்கள் செய்திருந்தனா்.