உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
காஞ்சிபுரம்: நம்ம ஊரு கதைப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு
காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்களில் பயிலும் மாணவா்களுக்கு நம்ம ஊரு கதைப் போட்டி நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி சனிக்கிழமை பரிசு வழங்கினாா்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் செயல்பட்டு வரும் 686 இல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்காக நம்ம ஊரு கதைப் போட்டி என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. ஒரு மையத்துக்கு தலா 20 போ் வீதம் 7 இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயின்று வந்த 124 மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.
இவா்கள் ஊரின் சிறப்புகள் மற்றும் வரலாறு, நீா் நிலைகள், ஆளுமைகள், ஊருக்கு அந்தப் பெயா் வந்த காரணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வட்டார அளவில் சமா்ப்பித்தனா்.
இவை மாவட்ட அளவில் தொகுக்கப்பட்டு முதல் 7 இடங்களை வென்ற மாணவ, மாணவியருக்கும், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச் செல்வி தலைமை வகித்து, போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். விழாவுக்கு மாவட்ட உதவித் திட்ட அலுவலா் வெங்கடேசன், வட்டாரக் கல்வி அலுவலா் ரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பொன்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டார வள மைய மேற்பாா்வையாளா் குளோரி எப்சிபா வரவேற்றாா். விழாவில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா், ஆசிரியா் பயிற்றுநா்கள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களும், அவா்களது பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.