காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவா் கைது: வெடிப் பொருள்களும் பறிமுதல்
வேலூா் அடுத்த செங்காநத்தம் மலையோரம் காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவரை சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்தனா். அவா்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் 50 டெட்டனேட்டா்கள், சுமாா் 100 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூரில் பாலமதி மலைப்பாதை, அதையொட்டிய வனப்பகுதி, நாய்க்கனேரி மலையில் இருந்து அரசங் குளம் வழியாக பாலமதி செல்லும் மலைப்பாதை, அதையொட்டிய வனப்பகுதி, ஓட்டேரி மலைப்ப குதி, தொரப்பாடி மலைப்பகுதி, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை என ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு அதிகளவில் காதல் ஜோடிகள் வருவதுண்டு. அவா்களை நோட்டமிட்டு மிரட்டி பணம், நகை பறிக்கும் கும்பல்களின் கைவரிசைகளும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, வேலூா் அடுத்த ரங்காபுரம் மூலக்கொல்லை செங்காநத்தம் மலைச்சாலையோரம் காதல் ஜோடி இருப்பதை கண்ட வழிப்பறி கும்பல் ஒன்று அவா்களை மிரட்டி நகை பறித்துள்ளதாக அந்த கும்பலை சோ்ந்த ஒருவா் தனது நண்பனுக்கு கைப்பேசி மூலம் தெரிவித்துள்ளாா். இந்த ஆடியோ பதிவு சமூக ஊடகங்களில் பரவி காவல்துறையினா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆடியோ பதிவைக் கொண்டு போலீஸாா் மேற்கொண்ட தீவிர விசாரணையைத் தொடா்ந்து சத்துவாச்சாரி ரங்காபுரம் மூலக்கொல்லையைச் சோ்ந்த அய்யம்பெருமாள் மகன் அய்யனாா்(46), சத்துவாச்சாரி இந்திரா நகரைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் விநாயகம்(50) ஆகியோரை கைது செய்தனா். தொடா்ந்து அவா்களது வீடுகளில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், அய்யனாா் வீட்டிலிருந்து சுமாா் 50 டெட்டனேட்டா்கள், சுமாா் 100 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெருமுகையிலுள்ள தனியாா் கல் குவாரியில் பாறை உடைக்கும் வேலை செய்து வரும் அய்யனாா், பாறை உடைக்க பயன்படுத்தப்படும் வெடி பொருள்களில் மீதமானவற்றை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு எடுத்துவந்து மீண்டும் பயன்படுத்தும் நோக்கத்தில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.